search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "filed report"

    காவிரியில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்தது. #PollutionControlBoard #SupremeCourt
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. மேலும் இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசுபட்ட வகையில் உள்ள ஆற்றுநீரை பயன்படுத்தும் உயிரினங்களுக்கும் பயங்கர கேடுகளை விளைவிக்கிறது.

    எனவே, கர்நாடகா மாநிலத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்து பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக பரிசோதனை செய்து இது தொடர்பாக ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

    காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை. கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் வழியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன.

    கடந்த செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை நான்கு மாதங்களில் காவிரி (அஜ்ஜிபோர்-கர்நாடகா), தென்பெண்ணையாறு (சொக்கரசனபல்லி- தமிழ்நாடு), அக்ராவதி (சங்கமா-கர்நாடகா) ஆகிய நதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தென்பெண்ணையாறு, காவிரி, அக்கராவதி ஆகிய நதிகளின் தண்ணீர் பெருமளவில் மாசடைகிறது. தண்ணீரின் தரத்தை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையை இரு மாநிலங்களும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த அறிக்கையின் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #PollutionControlBoard #SupremeCourt #tamilnews
    ×