search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign conspiracy"

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றியின் பின்னால் வெளிநாட்டு சதி இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாரதீய ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றுள்ளன.

    இந்த மாநிலத்தில் முன்னணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பாரதீய ஜனதா திடீர் எழுச்சி பெற்று 18 இடங்களை கைப்பற்றி இருப்பது திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆராய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

    அப்போது கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    கூட்டத்துக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பின்னால் வெளிநாட்டு சக்திகளின் சதி இருக்கலாம் என்று கருதுவதாக கூறினார்.

    ஆனால், இதற்கான ஆதாரம் எதுவும் என்னிடத்தில் இல்லை என்றார். மேலும் கூறிய அவர், ராஜஸ்தான், குஜராத், மற்றும் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பாரதீய ஜனதாவுக்கு கிடைத்து இருப்பதற்கு கண்டிப்பாக சதி பின்னணி இருக்க வேண்டும் என்று கூறினார்.

    இதை சொல்வதற்கு மக்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் 45 மந்திரிகள் உள்ளனர். இதில், 3-ல் ஒரு பங்கு மந்திரியின் சொந்த பகுதியிலேயே பாரதீய ஜனதா அதிக வெற்றிகளை பெற்று இருந்தது.

    இதனால் மம்தா பானர்ஜி அந்த மந்திரிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்.

    மாநிலத்தில் நிலவும் ஊழல், ஆள் கடத்தல் பிரச்சினைகள் போன்றவை ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார்.

    உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

    மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களில் பெரும் பாலானோர் பாரதீய ஜனதாவுக்கே ஓட்டளித்து இருந்தனர். 60 சதவீத தபால் ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைத்து இருந்தது.


    மோடி பிரசாரத்தின் போது, மாநில அரசு ஊழியர்களுக்கு மம்தா ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. விலைவாசி படியை கூட சரியாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    இதுவும் அரசு ஊழியர்கள் பாரதீய ஜனதா பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

    ×