search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former minister senthil balaji"

    கரூரில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்தது குறித்து போலீசாருடன் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #senthilbalaji
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டி.டி. வி.தினகரன் தலைமையிலும் கட்சி இரண்டாக பிரிந்தது.

    அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக்கோரி செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் தனபால் அந்த 18 எம்.எல்.ஏ.க் களையும் தகுதி நீக்கம் செய்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    இதற்கிடையே எம்.எல்.ஏ. ஆன உடன் (பதவி பறிப்புக்கு முன்பு) அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் முன் வைத்தார். ஆனால் இதுநாள்வரை அந்த கோரிக்கைகள் எதையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறை வேற்றவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் க.பரமத்தி கடை வீதியில் செந்தில் பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.

    உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் ஆகிய 3 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆனால் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.

    இந்தநிலையில் கோர்ட்டு அனுமதியுடன் க.பரமத்தியில் இன்று போராட்டம் நடத்துவதற்கான பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது அங்கு வந்த போலீசார் பணிகள் செய்யக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்து தடுத்தனர்.

    இதையறிந்த செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் விபரத்தை கேட்டார். இதில் கரூர் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், க.பரமத்தி இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    போலீசார் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முடிவுக்கு வந்த பிறகு அனுமதி அளிக்கப்படும் என்றனர். அப்போது எந்தவித உத்தரவாக இருந்தாலும் எழுத்துபூர்வமாக கொடுங்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார். அதனை ஏற்று ரூரல் டி.எஸ்.பி. முத்தமிழ்செல்வன் அளித்த கடிதத்தை இன்ஸ்பெக்டர் குணசேகரன், செந்தில் பாலாஜியிடம் அளித்தார்.

    இது தொடர்பாக செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறும் போது, தமிழக அரசும், காவல்துறையும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் போராட்டத்தை அடக்க நினைக்கின்றனர். கோர்ட்டு உத்தரவினை அவமதித்த அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். மீண்டும் கோர்ட்டு உத்தரவு பெற்று அதே இடத்தில் போராட்டம் நடத்தப்படும்.

    டி.டி.வி.தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் ஆளும் அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியின் பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு தடை விதிக்கிறார்கள். மத்திய பா.ஜ.க.வின் எடுபிடியாக இருந்து கொண்டு அவர்களின் உத்தரவினை எடப்பாடி அரசு நிறைவேற்றுகிறது.

    விரைவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க் களின் தீர்ப்பு வரும் போது தமிழகத்தில் பழனிசாமி அரசு இருக்காது என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #senthilbalaji
    ×