search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former Pakistan president"

    பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை முஷரப் நாடியது வீடியோ மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. #Pakistan #President #PervezMusharraf
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 75). இவர் 2007-ம் ஆண்டு, அங்கு நெருக்கடி நிலையை கொண்டுவந்தது பெரும் எதிர்ப்புக்கு வழி நடத்தியது.

    2008-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது அந்தக்கட்சியும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், முஷரப்பை பதவியில் இருந்து அகற்ற நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மென்ட்’ (பதவி நீக்க தீர்மானம்) கொண்டு வர ஒப்புக்கொண்டன.

    அந்த தீர்மானம் வருவதை தவிர்க்கும் விதத்தில் முஷரப் 2008-ம் ஆண்டு, ஆகஸ்டு 18-ந்தேதி பதவி விலகினார். தற்போது அவர் மீது தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகள், பாகிஸ்தான் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.

    ஆனால் அவர் 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறப்போவதாக கூறி துபாய்க்கு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவே இல்லை.

    இந்த நிலையில் தான் மீண்டும் அதிபர் ஆகி ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு அவர் அப்போது அமெரிக்காவின் ரகசிய உதவியை நாடியது அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பான சில வீடியோ காட்சி தொகுப்புகளை பாகிஸ்தான் கட்டுரையாளர் குல் புகாரி கசிய விட்டுள்ளார்.

    முதல் தொகுப்பில், முஷரப் பதவி விலகிய பின்னர் 2012-ம் ஆண்டுவாக்கில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தாழ்வாரத்தில் முஷரப் நடந்து செல்கிற காட்சி இடம் பெற்றிருக்கிறது.

    அடுத்த தொகுப்பில் அவர் அமெரிக்க எம்.பி.க்களிடம், “நான் கடந்த காலத்தில் இருந்து சில சான்றுகளை வைத்துள்ளேன். நான் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும். எனக்கு (அமெரிக்காவின்) ஆதரவு கிடைக்க வேண்டும். வெளிப்படையான முறையில் அல்ல. ரகசியமான முறையில்” என்று கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    மூன்றாவது தொகுப்பில், அமெரிக்க தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு பாகிஸ்தான் உடந்தையாக இல்லை என்று அவர் அமெரிக்க எம்.பி.க்களிடம் வாதிடுகிற காட்சி உள்ளது. மேலும், “பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்துகிற வகையில், ஒசாமா பின்லேடனை மறைந்து வாழச்செய்ததாக சொல்கிறார்கள். (ஒசாமா பின்லேடன் விவகாரத்தில்) பாகிஸ்தான் உடந்தையாக இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. ஆனால் அதில் நாங்கள் உடந்தையாக இல்லை என்பதுதான் எனது கருத்து” என்றும் முஷரப் கூறி உள்ளார்.

    மேலும், “அசட்டையாக இருந்து விட்டோம் என்பது உண்மைதான். நாங்கள் அனைவரும் வெட்கப்படுகிறோம். நான் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும்கூட, ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் உளவுத்துறை) அலட்சியமாக நடந்து கொண்டதை நாங்கள் அறியாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்” என்றும் முஷரப் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ காட்சிகள் பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. #Pakistan #President #PervezMusharraf 
    ×