search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former Police commissioner george"

    முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டில் நடந்த சி.பி.ஐ. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. #GutkhaScam #CBIRaid #George
    சென்னை:

    குட்கா ஊழல் விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரும் பூகம்பத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    குட்கா விற்பதற்காக அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஆதாரத்தை நிரூபிக்க சி.பி.ஐ. நடத்தி வரும் அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்தது. அப்போது சிக்கிய டைரியில் யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற முழு விவரமும் இருந்தது.

    முதலில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் முன்னேற்றம் இல்லாததால் ஐகோர்ட்டு உத்தரவு படி தற்போது இந்த லஞ்ச குற்றச்சாட்டு பற்றி டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதலில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து தகவல்களை பெற்ற டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அது பற்றி தீவிர ஆய்வு நடத்தினார்கள். லஞ்சப் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டு பிடித்து விட்டால் இந்த ஊழலை நிரூபித்து விடலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த வாரம் அவர்கள் சென்னை வந்து குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வைக்கு மேலும் ஒரு ரகசிய டைரி கொண்டு வரப்பட்டது. அந்த டைரியிலும் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் இடம் பெற்று இருந்தது.

    இதையடுத்து போலீசார் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அருகே உள்ள குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, பெங்களூர், மும்பை மற்றும் குண்டூர் ஆகிய 7 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நேற்று மாலை பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவுக்கு வந்தது.

    டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் சோதனை நடந்ததாக தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் ஏதேனும் ஆவணம் கைப்பற்றப்பட்டதா? என்பது பற்றி விசாரித்த போது தகவல்களை தெரிவிக்க சி.பி.ஐ. வட்டாரங்கள் மறுத்து விட்டன.

    கோப்புப்படம்

    நொளம்பூரில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை 5 அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இடைவிடாமல் சோதனை நீடித்தது. மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில் ஜார்ஜ் வீட்டில் மட்டும் சோதனையை அதிகாரிகளால் விரைந்து முடிக்க இயலவில்லை.

    ஜார்ஜ் வசிக்கும் நொளம்பூர் பங்களாவில் 32 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான அறைகள் சொகுசு வசதிகள் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால்தான் சோதனையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    ஒவ்வொரு அறையாக சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் நள்ளிரவையும் கடந்து விடிய விடிய சோதனை நீடித்தது. இன்று காலை 8.30 மணிக்கு ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனைகள் முடிவுக்கு வந்தன.

    ஜார்ஜ் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்ஜ் வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்புகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    ஜார்ஜ் வீட்டில் ஏதேனும் அறைக்கு சீல் வைக்கப்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை. ஜார்ஜ் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது குட்கா ஊழலில் தொடர்புடையது பற்றி குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித நகல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    நேற்று 7 இடங்களில் நடந்த சோதனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்த்த சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்டமாக விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சம்மன் அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

    விசாரணைக்கு பிறகு யார்-யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் என்பது தெரிய வரும். #GutkhaScam #CBIRaid #George
    குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் இன்று பல்வேறு குழுக்களாக 40 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.

    இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

    ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


    போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    இவர்கள் தவிர முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடந்து வருகிறது.

    அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குட்கா விற்பதற்கு லஞ்சம் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் யார்- யார்? அவர்களுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது? என்பது போன்ற தகவல்களை ஏற்கனவே டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி விட்டனர். இந்த ஊழ லில் ஏராளமான அரசு ஊழியர்கள் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

    ஆனால் இந்த ஊழலில் மொத்தம் 23 அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல லஞ்ச ஒழிப்புத்துறையினரும் சில அதிகாரிகள் பெயரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி குட்கா ஊழலில் தொடர்புடைய மேலும் சில அதிகாரிகளை கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். #GutkhaScam #CBIRaid
    ×