search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former president family missing"

    சமீபத்தில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயர்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் வங்காளதேசத்தில் இருந்து பலர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்தது. இதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நேற்று தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. மேலும், இன்று கூடிய மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பலரது பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    1974 முதல் 1977 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவின் சகோதர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன் தனது பெயர் பட்டியலில் இல்லை என புகார் தெரிவித்துள்ளார். 

    1971-ம் ஆண்டுக்கு முன் அசாமுக்குள் வந்தவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் வெளிநாட்டவராக கருதப்படுவார்கள் என்பதன் அடிப்படையிலே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    ஆனால், முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரின் பெயரே பட்டியலில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியின் போதே, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சிலர் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    மேற்கண்ட விவகாரத்தை குறிப்பிட்டு டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, “முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பெயரே பட்டியலில் இல்லாமல் போயுள்ளது. இதற்கு மேல் என்ன கூற இருக்கிறது?. 

    பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை நினைத்து பார்த்தீர்களா?. இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் எல்லாமே ஒன்றாக இருந்தது தான் என்பதை மறந்து விடாதீர்கள். 1971-க்கு முன்னர் வங்காளதேசத்தில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான்” என அவர் கூறினார்.
    ×