search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freely transported"

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க விவசாய விளைபொருட்களை தமிழக அரசு பஸ்களில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க விவசாய விளைபொருட்களை தமிழக அரசு பஸ்களில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.



    சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் டீசலை கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். இதற்கு பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

    தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றன. சென்னையில் மாதவரம், மஞ்சம்பாக்கம், மதுரவாயல் பைபாஸ், எண்ணூர் உள்பட பல இடங்களில் லாரிகளை சாலை ஓரமாக டிரைவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள லாரி டிரைவர்கள், கிளனர்கள் ஆங்காங்கே லாரிகளை சாலையோரங்களில் நிறுத்தி, லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். பலர் உணவு, தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் வேலைநிறுத்தத்தை கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைப்பார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    இதுகுறித்து தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியதாவது:-

    நாடு முழுவதும் சுமார் 95 லட்சம் வாகனங்கள் இந்த வேலைநிறுத்தத்தால் ஓடாமல் ஆங்காங்கே நிற்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மட்டும் 26 லட்சம் வாகனங்கள் இயங்கவில்லை.

    இதில், 4 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளும் அடங்கும். விசாகப்பட்டினம், தூத்துக்குடி, சென்னை, நெல்லூர் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை ஏற்றுவதற்கு லாரிகள் செல்லவில்லை.

    நாளை (திங்கட்கிழமை) முதல் பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் லாரிகளின் உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற இருக்கின்றனர். அதன்பிறகு வேலைநிறுத்தத்தின் வீரியம் அதிகரிக்கும்.

    நாளொன்றுக்கு பொருட் கள் மதிப்பு மீதான ரூ.24 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி வரை வரி இழப்பும், ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரையிலான நேரடி வரி இழப்பும் மத்திய அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    இதுவரை மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. உடனடியாக நிலையை புரிந்து கொண்டு எங்களை அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்வுகாண வேண்டும். அதுவரை எங்களுடைய வேலைநிறுத்தம் கடுமையாக இருக்கும்.

    ஏற்கனவே பலமுறை நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது. இந்த முறை எங்களுடைய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக செய்து தருவதாக மத்திய அரசு உறுதியளித்து, அதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. இவை அனைத்தும் பெரும் பாலும் லாரிகள் மூலமாகவே வந்து சேர்கின்றன.

    நேற்று 2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றபோதிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் காய்கறிகள் வந்தன. விற்பனையும் வழக்கம் போல் நடைபெற்றதுடன், விலையிலும் பெருமளவு மாற்றம் ஏதும் இல்லை.

    இது குறித்து காய்கறி சில்லரை வியாபாரி சுப்பிரமணி என்பவர் கூறும்போது, “லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தாலும், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று (நேற்று) வழக்கம் போல் காய்கறிகள் வந்துவிட்டன. நாங்கள் விற்பனை செய்வதற்காக கொள்முதல் செய்யும் காய்கறிகளின் அளவும் குறையவில்லை. விற்பனையும் குறையவில்லை. அதே நேரம் விலையும் ஏறவில்லை” என்றார்.

    எனினும், லாரிகள் வேலை நிறுத்தத்தின் பாதிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை) பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக விவசாய விளைபொருட்களை தமிழக அரசு பஸ்களில் இலவசமாக ஏற்றிச்செல்ல அரசு அனுமதி அளித்து உள்ளது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லாரிகள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் எவ்வித கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச்செல்ல அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. 
    ×