search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganapathi Agraharam"

    • சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள்.
    • மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள்.

    சோழவள நாட்டில் பொன்னிமா நதியின் வடபால் ஸ்ரீ மஹாகணபதி க்ஷேத்திரங்களில் ஒன்றாய் அவரது திருநாமத்தாலேயே விளங்குவது கணபதி அக்ரஹாரம்.

    கணபதி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பாகவும், பழமையாகவும் மிகுந்த அருளோடு விளங்குவதும் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆன பெருமை உடையது. பின் ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை "அண்ணகோஷஸ்தலம்" என்று புராணங்களில் கூறப்படுகிறது.

    ஒரு சமயம் அகஸ்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் "சல சல" என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம் அவரை கோபம் அடைய செய்து அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட சோழதேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகஸ்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத்தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.

    மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியில் காலையில் அபிஷேக ஆராதனையும் மாலையில் சுவாமி புறப்பாடும் தேய்பிறை சதுர்த்தியில் "சங்கடஹர சதுர்த்தியில்" பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற விரதம் இருந்து அன்று இரவு வருவார்கள். பூஜையில் கலந்து கொண்டு பின் இல்லம் செல்வார்கள்.

    சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள். மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள். மேலும் இவ்வூரில் மிகவும் சிறப்பாக போற்றப்படுவதும் கொண்டாடபடுவதும் ஆன விநாயக சதுர்த்தியை மற்ற ஊர்களில் போல் தத்தம் இல்லங்களில் மண்ணினால் ஆன விக்கிரகத்தை வைத்து வழிபாடு செய்யாமல் அவ்வூர் மக்கள் அனைவரும் விநாயக ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள்.

    இத்திருத்தலத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாள் முன்னதாகவே கொடியேற்றம் நடைபெறும். கொடி ஏற்றத்தின்போது பக்தர்கள் அவர்கள் குறை போக்க தாங்கள் உடுத்தும் சட்டைத்துணியும், துண்டு வஸ்திரத்தை புதிதாக வாங்கி மஞ்சள் காசுடன் சேர்த்து விநாயக பெருமான் கோவிலில் சேர்த்து விடுவார்கள். அப்பொருட்களை சிவாச்சாரியார் பெற்று கொண்டு கொடியேற்றத்துடன் இவைகளையும் கொடிமரத்தில் ஏற்றி பின் கொடி இறக்கம் செய்யும் காலத்தில் பக்தர்கள் பெற்று தங்கள் குறைகளை நிவர்த்தி பெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    கொடியேற்றம் நடைபெற்ற பின் காலை, மாலைகளில் விநாயகர் பல்வேறு விமானங்களில் வீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாள் விநாயகரை தேர் உலா நடைபெற்று விநாயக சதுர்த்தி அன்று மஹா அபிஷேகம் நடைபெற்று விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பாடு செய்து யாகசாலையில் எழுந்தருளச் செய்து பொறிதூவி வழிபாடு செய்து திருவீதி உலா, மற்றும் தீர்த்தவாரி நடைபெற்று பின் பதினெட்டு காலம் பூஜிக்க பட்ட கலசத்துடன் ஆலயத்தை வலம் வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் அன்னதானம் நடைபெற்று இரவில் கொடி இறக்கம் நடைபெறும். மறுநாள் சப்தவரணம் என்கிற நிகழ்ச்சியாக ஏழுமுறை ஆலயத்தை வலம் வந்து ஒவ்வொரு முறையும் வலம் வரும் நிகழ்ச்சியாக வேத கோஷம், நாட்டியம், சங்கீதம், மௌனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் மாலையில் கண்ணாடி பல்லக்கு திருவீதி உலா நடைபெறும்.

    அதன்பின் மஞ்சள் நீர் விளையாட்டு, பந்தல் காட்சிகள், ஊஞ்சல் சேவை என்று தண்டிகேஸ்வரர் உற்சவமும் மறுநாள் விடையாற்றி விழாவாக விநாயகருக்கு ஆஸ்தான பிரவேசம் நடைபெறும்.

    இவ்வாலயத்தை தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும், மீண்டும் வரும் மனம் படைத்தவராகவும் அருள் பெற்றவராகவும் காணமுடிகிறது. நாம் அனைவரும் சென்று முருகனுக்கு மூத்தவரை முக்கண் மகன் கணபதியை வழிபட்டு வாழ்வில் சகல நலன்கள் பெறுவோமாக!

    ×