search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa secretariat"

    உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று அரசு தலைமை செயலகத்துக்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #GoaCM #ManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பாரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீண்ட நாட்களாக தனது வீட்டில் இருந்தவாறு முதல் மந்திரியின் அலுவலகம் சார்ந்த பணிகளை கவனித்து வந்த மனோகர் பாரிக்கர் புத்தாண்டு தினமான இன்று போர்வோரிம் நகரில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்கு வந்தார்.

    மூக்கில் சுவாச குழாயுடன் மிகவும் சோர்வாக காணப்பட்ட மனோகர் பாரிக்கருக்கு கோவா மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தலைமை செயலகப் பணியாளர்கள் மலர் செண்டுகளை அளித்து, வரவேற்பு தந்ததுடன், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.




    அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்த மனோகர் பாரிக்கர், முதல் மந்திரி அலுவலக அறைக்கு சென்று சில கோப்புகளை பரிசீலனை செய்து கையொப்பமிட்டார். பின்னர், மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுடன் அவர்களின் துறைசார்ந்த முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தார். #GoaCM #ManoharParrikar
    ×