search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government rules"

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (வாட்) வசூலித்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

    நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும். அதுவரை, பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயைத்தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

    மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு மேல், நிவாரணம் வழங்க முடியாது. மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

    பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. அதனால் ரூ.83.91-க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.76.98 ஆனது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment 
    ×