search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hajaji Hall"

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை தொடர்ந்து வாகனங்கள் ஏதும் ஓடாததால் முழுஅடைப்பு போல் தமிழகம் வெறிச்சோடி காணப்படுகிறது #RIPKarunanidhi
    சென்னை:

    காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலே சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடின. அவரது மரணச்செய்தி நேற்று மாலை 6.10 மணிக்கு பிறகு வெளியாகப்போகிறது என்கிற தகவல் முன்கூட்டியே பரவியது. இதன் காரணமாக தங்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கடைகளுக்கு சென்று வாங்கினர்.

    நேற்று இரவு 7 மணிக்கே சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நள்ளிரவு போல காட்சி அளித்தது. சிறிய பெட்டிக்கடைகளில் தொடங்கி பெரிய ஓட்டல்கள் வரை அத்தனையும் அடைக்கப்பட்டுவிட்டது.

    இன்று காலையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக மட்டும் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தனர். முன்னதாக கருணாநிதி மரணம் அடைந்துவிட்ட தகவல் பரவியதும் நேற்று மாலையில் ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் நின்றும் பொது மக்கள் பால் வாங்கியதை காண முடிந்தது.

    சென்னையை பொறுத்த வரையில் தினமும் பரபரப்பாகவே விடியும். அதிகாலையிலேயே சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கிவிடும். மாநகர பேருந்துகளும் முழு அளவில் இயங்கும். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் இன்று காலையில் அதுபோன்ற எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. காலையில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இது முழுஅடைப்பு நடந்தால் எப்படி இருக்குமோ? அது போன்று வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலையே காணப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.



    கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பேருந்து நிலைய வளாகத்திலேயே பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மாநகர பேருந்துகள் எதுவும் ஓடாததால் அங்கு பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. மின்சார ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும் வழக்கம் போல இயங்கின.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. வெளியூர்களில் இருந்து கோயம்பேடு மார்க் கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகள் வந்துள்ளன. சரக்குகள் இறக்காமல் உள்ளன.

    இதனால் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் களை இழந்து காணப்பட்டது. ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.



    இதனால் வெளியில் ஆட்கள் நடமாட்டம் இன்றியே காணப்பட்டது. தி.மு.க.வினர் மட்டும் தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர். நேற்று மாலையிலேயே பஸ், போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டது. மின்சார ரெயில்களும் முழு அளவில் இயக்கப்படவில்லை. குறைந்த அளவில் ஓடிய பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. படியில் தொங்கியபடியே பெண்களும் பயணம் செய்தனர்.

    இதனால் நேற்று மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள். குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளானார்கள்.
    ×