search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindustan Aeronautics Limited"

    ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறிய கருத்து தவறானது என்று ராணுவ அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. #RafaleDeal #HindustanAeronauticsLimited #MinistryofDefence
    புதுடெல்லி :

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - பா.ஜனதா இடையே நீண்ட வாக்குவாதம் நீடித்து வருகிறது.

    சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவன முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், ‘நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்–30 ரக போர் விமானங்களையே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரிக்கும்போது, ரபேல் விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும்’ என்று கூறினார்.

    இதையடுத்து, இவ்விவகாரத்தில் பொய் கூறிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், சுவர்ண ராஜு கூறியதை ராணுவ அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கும், பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துக்கும் பல்வேறு முரண்கள் இருந்தன.

    இதுபற்றி 2012–ம் ஆண்டு அக்டோபர் 11–ந் தேதி, ராணுவ அமைச்சகத்துக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் கடிதம் எழுதியது. இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பதாக 2014–ம் ஆண்டும் கூறியது. இந்த முரண்பாடுகளால்தான், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, சுவர்ண ராஜு கூறுவது தவறானது’ என்று தெரிவித்துள்ளது. #RafaleDeal #HindustanAeronauticsLimited #MinistryofDefence
    ×