என் மலர்
நீங்கள் தேடியது "History of Gaya"
- பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கயா.
- இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் புனித தலமாகத் திகழ்கிறது.
கயா செல்லாமல் காசி யாத்திரை நிறைவு பெறாது என்பார்கள்.
புராண காலத்தில் கயாசுரன் என்பவன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் புரிந்தான். அவன் முன்பாக தோன்றிய பிரம்மன், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு கயாசுரன், "தேவர்கள் அனைவரையும் வெல்லும் வரம் எனக்கு வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டு பெற்றான்.
இதையடுத்து தேவர்கள் அனைவரையும் வென்ற கயாசுரன் அவர்களை துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து கயாசுரனுடன் போரிட்ட சிவபெருமான், அவனை காசியில் வைத்து சூலத்தால் குத்தி, அவனது தோலை உரித்ததாக புராணத்தில் உள்ளது.
இன்னொரு புராணத்தின் படி, கயாசுரனால் துன்பப்பட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். கயாசுரன் இருப்பிடம் சென்ற விஷ்ணு, "உனக்கு தேவையான வரத்தை தருகிறேன். தேவர்களை துன்புறுத்துவதை நிறுத்து" என்றார்.
உடனே கயாசுரன், "பாவங்களைப் போக்கும் அனைத்து தீர்த்தங்களையும் விட, நான் உயர்ந்த தீர்த்தமாக இருக்க வேண்டும். அதற்கு என் புனிதமான உடலை தொடுபவர்கள் அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்" என்ற வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை அருளினார்.
அதன்படி கயாசுரனின் உடல், புனிதமானதாக மாறியது. பாவம் செய்பவர்கள் அனைவரும், கயாசுரனின் உடலை தொட்டு மோட்சத்திற்குச் செல்லத் தொடங்கினர்.
இதைக் கண்ட எமதர்மன், "இது என்ன அநியாயமாய் இருக்கிறது. பாவம் செய்பவர்கள் அனைவருமே மோட்சத்துக்கு செல்வர் என்றால், நரக தண்டனை யார்தான் அனுபவிப்பது" எனக் கேட்டு விஷ்ணு பகவானிடம் முறையிட்டார்.
உடனே விஷ்ணு பகவான் பிரம்மனை அழைத்து "நீ கயாசுரனிடம் சென்று 'உன் உடல் புனிதமானது. ஆகவே அதைக் கொண்டு யாகம் செய்ய விரும்புகிறோம். எனவே யாகம் செய்ய உன் உடலைத் தர வேண்டும்' என்று கேள்" என்றார்.
பிரம்மனும் அப்படியே கயாசுரனிடம் கேட்க, அவனும் தன்னுடைய உடலைக் கொடுத்தான். அவனின் உடல் மீது தேவர்கள் புடை சூழ அமர்ந்து, பிரம்மன் வேள்விளைத் தொடங்கினார். வேள்வி முடியப்போகும் தருவாயில், கயாசுரனின் தலை அசைய ஆரம்பித்தது.
பிரம்மனின் உத்தரவுப்படி, கயாசுரனின் தலை மீது ஒரு கல்லை எடுத்து வைத்தார், எமதர்மன். அப்போதும் கயாசுரனின் தலை அசைவது நிற்கவில்லை. அனைவரும் மகாவிஷ்ணுவை வேண்டினர்.
அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, தன் கதாயுதத்தால் கயாசுரனின் தலை அசையாதபடி தடுத்து நிறுத்தினார். மேலும் கயாசுரனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு கயாசுரன், "நான் கேட்பது பழைய வரம்தான் என்றாலும், அதையே எனக்கு தந்தருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும். இங்கு வந்து யார் ஒருவர் தன் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தாலும், அவர்கள் செய்த பாவங்கள் விலகி, முக்தி கிடைக்க வேண்டும்" என்றான்.
விஷ்ணு பகவானும் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என வரம் கொடுத்ததாக சொல்வார்கள். இந்த புராண நிகழ்வு ளின் காரணமாகவே, இங்குள்ள பல்குனி நதியும், விஷ்ணு பாதமும், அட்சய வடமும் புனிதமானதாக கருதப்படுகிறது.
பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கயா. ஒரு காலத்தில் வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற மகத பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம், பல்குனி நதியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் இது ஒரு புனித தலமாகத் திகழ்கிறது.