என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Holy Quran Verse"
- நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது.
- சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும்.
எளிதான வெற்றிகளையும், இனிமையான வாழ்க்கையையும் விரும்பும் மனிதர்களே இந்த உலகில் அதிகம் உள்ளனர். எதுவும் எளிதாக கிடைக்க வேண்டும், எப்போதும் நன்மைகளே நடக்க வேண்டும் என்ற எண்ணமே மனிதர்களிடம் அதிகம் பரவி உள்ளது. ஆனால் மனித வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல, எப்போதும் நன்மைகள், இனிமைகள் நிறைந்தது அல்ல. மனித வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்ததாக, ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவே அமைந்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையை தன் நல்லடியார்களுக்கு ஒரு சோதனைக் களமாகவே அமைத்துள்ளான். சோதனைகள் பல்வேறு வடிவில் தாக்கும் வகையில் தான் மனித வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளை யார் பொறுமையாக எதிர்கொண்டு, இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்து, உதவி தேடுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். சோதனைகளை மட்டும் அல்ல இறைவனின் அன்பையும் அவர்கள் வெற்றி கொள்கின்றனர்.
திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:-
'நம்பிக்கையாளர்களே, உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடம் இருந்தும், இணை வைத்து வணங்குவோரிடம் இருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்.
ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாகாரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்'. (திருக்குர்ஆன் 3:186)
இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் நாம் அறிவது என்ன?.
நாம் எவை எல்லாம் நமக்கு நன்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அவை எல்லாம் முழுமையான நன்மைகள் அல்ல. அந்த நன்மையிலும் நமக்கு சோதனை காத்திருக்கிறது. அத்துடன் அந்த சோதனையை எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
அதாவது, சோதனைகள் இறைவன் தரப்பில் இருந்து வரும், அப்போது நாம் அதற்காக கலங்கி நின்று வேதனையில் மூழ்கிவிடக்கூடாது. சோதனை வரும்போது நாம் பொறுமை காக்கவேண்டும். இறைவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஈடு இணையற்றவன். சோதனைகளில் இருந்து நம்மை காக்கும் சக்தியும் வல்லமையும் பெற்றவன் அவன் ஒருவனே. எனவே அந்த இறைவனிடம் மட்டுமே நாம் சரணடைந்து உதவி கேட்க வேண்டும். அது தான் நமக்கு சோதனைக்காலத்தில் நன்மை தேடித்தரும் செயலாகும்.
எந்த மனிதரும் இறைவனின் சோதனையில் இருந்து தப்பிக்க முடியாது. இறைவன் தரும் சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. மனிதர்கள் மட்டுமல்ல இறைவனின் அருள்பெற்ற இறைத் தூதர்களும், இறை நேசச்செல்வர்களும், இறைவனின் நல்லடியார்களும் சோதனைக்கு ஆளாக்கப் பட்டார்கள். இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது அடைந்த இன்னல்களும், துன்பங்களும் அளவிட முடியாதவை.
ஆனால் எத்தனை சோதனைகள் வந்த போதும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கை கொண்டார்கள். தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளில் இருந்து மீண்டு வர அந்த இறைவனிடமே உதவி கேட்டனர். அந்த உதவி மூலம் அவர்கள் சோதனை களைக் கடந்து சாதனை புரிந்தனர். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
'(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டமான நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? உங்களைப் போல நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க ''அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்? எப்பொழுது வரும்?'' என்று கேட்டதற்கு ''அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக இதோ சமீபத்திலிருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள்'. (திருக்குர்ஆன் 2:214)
'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!'. (திருக்குர்ஆன் 2:155)
"நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 8:28).
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும். (திருக்குர்ஆன் 2:45)
சோதனைகளை கொடுப்பவனே அதில் இருந்து மீண்டு வர வழியையும் காட்டுகின்றான். அந்த வழி, அல்லாஹ்விடம் முழுமையாக சரண் அடைந்து அவனை மட்டுமே வணங்கி உதவி தேடுவது. நமது பாவங்களையும், பிழைகளையும் மன்னித்து அருள்புரியுமாறு அவனிடம் கேட்பது. இதன் மூலம் அல்லாஹ் நமது சோதனைகளை நீக்கி நமக்கு இம்மையிலும், மறுமையிலும் நன்மை தருவான்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்