search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IG Pon manikavel"

    நெல்லை பழவூர் நாறும்பூநாதர் கோவில் சிலை கடத்தப்பட்ட வழக்கில் ஆஜராக மாதாவரம் இன்ஸ்பென்க்டர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காசிப், சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி காதர் பாட்ஷா 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #IdolSmuggling #IGPonmanikavel
    சென்னை:

    நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சிலைகளின் மதிப்பு ரூ.30 கோடியாகும்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் ஆடல் நடராஜன், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில் காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன.

    மற்ற சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிலர் தப்ப விடப்பட்டு இருப்பதாகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டது.

    அதோடு இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணையை தொடங்கியதும் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் பழவூர் கோவிலுக்கு வந்து பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாமி சிலைகளை போட்டோ எடுத்தது தெரிய வந்தது. அவர் அவ்வாறு போட்டோ எடுத்து சென்றபிறகுதான் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்தார்.

    மேலும் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் சென்னை, டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன என்பதும் தெரிய வந்தது. அதோடு 4 சிலைகளில் இருந்த தங்கத்தை பிரித்தெடுக்க அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் அமிலம் ஊற்றி அழித்து விட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மேலும் 8 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே சுபாஷ்கபூர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வல்லப்பிரகாஷ், ஆதித்திய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் ஏற்கனவே ஜெயிலில் உள்ளனர்.

    சிலை கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே பழவூர் சாமி சிலைகள் கடத்தப்பட்டது பற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைத்து அவர் விசாரித்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிப் மற்றொரு டி.எஸ்.பி. காதர்பாட்சா, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த 3 போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரிடையாக இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.

    சிலைகள் கடத்தப்பட்ட போது போலீஸ் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டது பற்றிய தகவல்களை உரிய முறையில் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடைபெற உள்ளது.

    இதுமட்டுமின்றி பழவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை செய்து வைத்து பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவானந்த்திடம் அதிரடி விசாரணை நடத்த பொன்.மாணிக்கவேல் முடிவு செய்துள்ளார்.

    இந்த விசாரணைக்கு பிறகு பழவூர் கோவில் சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IdolSmuggling #IGPonmanikavel
    ×