search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India batsman"

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். #SureshRaina #T20Cricket
    புதுடெல்லி:

    சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசம்-புதுச்சேரி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. இதனால் உத்தரபிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய இந்திய சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 11 ரன்னை எட்டிய போது சுரேஷ் ரெய்னா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து) 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 300-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா 8,001 ரன்கள் குவித்துள்ளார். உலக அளவில் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 6-வது இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 12,298 ரன்னும் (369 போட்டி), நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் 9,922 ரன்னும் (370 போட்டி), வெஸ்ட்இண்டீஸ் வீரர் பொல்லார்ட் 8,838 ரன்னும் (451 போட்டி), பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 8,603 ரன்னும் (340 போட்டி), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 8,111 ரன்னும் (259 போட்டி) எடுத்து முறையே முதல் 5 இடங்களில் இருக்கிறார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 251 போட்டிகளில் விளையாடி 7,883 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் உள்ளார்.

    டெல்லியில் நடந்த சர்வீசஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய பரோடா அணி 18.2 ஓவர்களில் 75 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய சர்வீசஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூரத்தில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதுர்வேத் 34 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னும், ஜெகதீசன் 29 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஆர்.அஸ்வின் 1 ரன்னில் ‘அவுட்’ ஆனார். பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 124 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    இந்தூரில் நடந்த கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை வீரர் பிரித்வி ஷா 47 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூரத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்காக ஆடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகள் சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.
    ×