search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "international mobs"

    தமிழகம், புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.100 கோடி பணம் திருடப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- #FakeATMcard #Puducherry
    புதுச்சேரி:

    கேரளாவில் டிஸ்கோ நடன கிளப்பில் ஏற்பட்ட தகராறில் புதுவை வாலிபர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இது பற்றி விசாரித்த போது, புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் கும்பல் செயல்படுகிறது. அவர்கள் இந்த கார்டுகளை எனக்கு வழங்கினார்கள் என்று கூறினார்.

    அப்போது புதுவை பல்கலைக்கழக ஊழியர் பாலாஜி, கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஜெயச்சந்திரன், புதுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விவேக் ஆனந்த், சென்னையை சேர்ந்த ஷியாம், கடலூரை சேர்ந்த கமல் ஆகியோர் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கப் பணம், ரூ. 46 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள், 19 ஸ்வைப்பிங் எந்திரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இணையதள வர்த்தகம் மூலம் ஸ்கிம்மர் என்ற கருவியை வரவழைத்தனர். இந்த கருவி சிறிய அளவிலான கம்ப்யூட்டர் சாதனம் ஆகும். இதை ஏ.டி.எம். எந்திரங்களில் யாருக்கும் தெரியாமல் ஒட்டி வைத்து விடுவார்கள்.

    பணம் எடுக்க ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தும் போது, அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஸ்கிம்மர் கருவி பதிவு செய்து கொள்ளும். அதில் ஒரு சிறிய ரகசிய கேமராவும் இருக்கும். அது, குறியிடும் பாஸ்வேர்டு விவரத்தை படம் பிடித்து கொள்ளும்.

    இதன் பிறகு இந்த தகவல்களை வைத்து போலியாக ஏடி.எம். கார்டுகளை இவர்கள் தயாரித்தனர். அந்த கார்டுகளை ஏ.டி.எம். மையங்களில் பயன்படுத்தி பணத்தை எடுத்தனர்.


    இவ்வாறு பணம் எடுத்தால் குறைந்த அளவு மட்டுமே பணம் எடுக்க முடியும். அதனால் ஏ.டி.எம். கார்டு மூலம் பொருட்கள் வாங்கியது போல் ஸ்வைப்பிங் எந்திரத்தில் கார்டுகளை தேய்த்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர். இதற்காக வங்கிகளில் தவறான தகவல்களை வழங்கி ஏராளமான ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி வைத்திருந்தனர்.

    பல கடை உரிமையாளர்களை தங்களின் கூட்டாளிகள் ஆக்கி அவர்களின் ஸ்வைப்பிங் எந்திரம் மூலமும் ஏராளமான பணத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி இருக்கிறார்கள். இதற்காக அந்த கடைக்காரர்களுக்கு 10 சதவீதம் வரை கமி‌ஷன் கொடுத்துள்ளனர். இவ்வாறு உதவிய வியாபாரிகள் டேனியல் சுந்தர்சிங், சிவக்குமார், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடி கும்பலுக்கு புதுவை அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோர் தலைவர்களாக இருந்து செயல்பட்டு உள்ளனர். இவர்களில் சத்யா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்துருஜியை போலீசார் தேடிவருகிறார்கள்.

    இதற்கிடையே சந்துருஜியின் தம்பி மணி சந்தர் (வயது 28). தனது அண்ணனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    சென்னையில் பதுங்கி இருந்த மணிசந்தரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர் பயன்படுத்திய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கும்பல் புதுவை மட்டுமின்றி தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது ஆட்களை போலி ஏ.டி.எம். கார்டுகளுடன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி அங்குள்ள ஏ.டி.எம்.களில் இருந்தும் பணத்தை எடுத்துள்ளனர்.

    இவர்களுடன் நாடு முழுவதும் பல மோசடி கும்பல் தொடர்பில் இருந்துள்ளனர். இதற்காக வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதில், ஸ்கிம்மர் கருவி மூலம் ஏ.டி.எம்.கார்டின் தகவல்களை எப்படி திருடுவது? கார்டு எப்படி தயாரிப்பது? அதை எந்தெந்த முறைகளில் பயன்படுத்துவது போன்ற விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் பரிமாறி இருக்கிறார்கள்.


    இந்த வாட்ஸ்-அப் குரூப்பில் மட்டுமே 25-க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டு நாடு முழுவதும் ஏடி.எம்.கார்டு மூலம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சுமார் ரூ. 100 கோடி வரை கொள்ளை நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மோசடி கும்பல் குறிப்பாக வெளிநாட்டினரை குறிவைத்தே இந்த மோசடியை செய்துள்ளனர். வெளி நாட்டினர் எந்த பகுதிகளில் எல்லாம் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துவார்களோ அங்கு ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ரகசியங்களை திருடி கார்டு தயாரித்துள்ளனர்.

    வெளிநாட்டினரிடம் திருடினால் அவர்கள் போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் விரைவில் நாடு திரும்பி விடுவார்கள் என்பதால் தொடர் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்கள்.

    மேலும் அவர்களுடைய கணக்கில் ஏராளமான பணம் இருக்கும். எனவே, அவர்கள் ஏ.டி.எம். கார்டுகளை போலியாக தயாரித்தால்தான் பிரச்சினை வராது என்று கருதியே வெளிநாட்டினரை குறிவைத்துள்ளனர்.

    புதுவையில் ஆரோவில் பகுதியில் பல வெளிநாட்டினர் வசிக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் புதுவைக்கு சுற்றுலா வருகிறார்கள். அவர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்திருக்கிறது.

    இதேபோல் சென்னையிலும் வெளிநாட்டினர் அதிகம் புழங்கும் ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவி மூலம் தகவல்களை திருடி இருக்கிறார்கள்.

    இதன் முக்கிய குற்றவாளியான சந்துருஜி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் கைதானால் முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறியதாவது:-

    ஏடி.எம். மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்புள்ளது. டென்மார்க், பெல்ஜியம், அயர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து மர்ம நபர்கள் இவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் தான் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பது தொடர்பான அனைத்து விவரங்களையும் இவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள் என கருதுகிறோம்.

    சந்துருஜி கைதானால் தான் மற்ற விவரங்களை கண்டுபிடிக்க முடியும். எனவே, தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.

    இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறும் போது, ஏ.டி.எம். மோசடி தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம், எஸ்.டி.எப். ஆகிய போலீசார் இணைந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த மோசடியில் சர்வதேச கும்பல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அதற்கேற்றபடி போலீஸ் விசாரணை மாற்றப்படும் என்று கூறினார்.

    இதற்கிடையே இந்த மோச யில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வை சேர்ந்த மேலும் பல பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இது சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளையும் கைது செய்ய வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. #FakeATMcard #Puducherry #TamilNadu
    ×