search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacqueline Fernandas"

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் விமர்சனம். #KolamavuKokilaReview #Nayanthara
    நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் பெர்ணான்டசுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, சாந்த சுபாவமுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

    குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் பத்தாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் சரண்யா பொன்வண்ணனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதை சரிசெய்ய முடியும் என்றும், அதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 



    இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ண நயன்தாரா முயற்சி செய்கிறார். இந்த நிலையில், போதைப்பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை கொடுத்து ஒரு இடத்தில் கொண்டு கொடுக்க சொல்கிறது. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறார்.

    இதையடுத்து தனது அம்மாவை காப்பற்ற பணம் தேவைப்படுவதால், போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாரா அந்த கும்பலின் தலைவரிடம் பணம் வாங்குகிறார்.



    கடைசியில், இந்த போதைப் பொருள் கடத்தல் நயன்தாராவுக்கு எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது? அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார்? தனது அம்மாவை காப்பாற்றினாரா? யோகி பாபுவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தனது ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை கொடுக்கிறது. 



    நயன்தாராவின் சாந்தத்தை பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். கல்யாண வயசு பாடலை பார்க்கவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரையரங்கில் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    சரண்யா பொன்வண்ணன் யதார்த்தமான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். ஜாக்குலினின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. முதல் படம் போல இல்லாமல், ரசிகர்களை கவரும்படியாகவே ஜாக்குலின் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஹரிஷ் பேரிடி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா என மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.



    தனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள். தனது அம்மாவை காப்பாற்ற போதை பெருள் கடத்தலில் ஈடுபடும் நயன்தாரா அதில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். 

    அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட்தான். திரையில் பார்க்கவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `கோலமாவு கோகிலா' கொண்டாட்டம். #KolamavuKokilaReview #Nayanthara

    ×