search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa treatment"

    ஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டில் ஆணையத்தின் செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். #ArumugasamyCommission #Jayalalithaa
    சென்னை:

    அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் கடந்த வாரம் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிப்பதாகவும், அதற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    21 துறைகளை சார்ந்த மருத்துவ குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கவும் அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் வழக்கு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த வழக்கில் இன்று ஆணையத்தின் செயலாளர் கோமளா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், முடியும் தருவாயில் உள்ள விசாரணை தொடர்வதை தடுக்கவே அப்பல்லோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் சிகிச்சை, மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும், மரணத்தில் சந்தேகம் தெரிவித்து தமிழகம் முழுக்க 302 புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 30 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதையும் விசாரணை ஆணைய செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆணையத்தை எதிர்த்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்குகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், 147 சாட்சிகள், 56 மருத்துவர்கள், 22 துணை மருத்துவ துறையினர் இதுவரை சாட்சியமளித்துள்ளதையும் பதிலில் குறிப்பிட்டுள்ளனர்.

    அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரிக்கும்போது நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆணையத்தில் மருத்துவர்களால் கூறிய வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறு என்றும், அவை தட்டச்சு தவறுகள் தான் என்றும் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

    ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவிற்கு, பதிலளிக்க அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை பிப்ரவரி 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #ArumugasamyCommission #Jayalalithaa
    ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு செலுத்தவேண்டிய பாக்கி தொகையான ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாயை அ.தி.மு.க. தலைமைக்கழகம் வழங்கியதாக தெரிவித்துள்ளது. #ADMK #JayalalithaaDeath #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் இருந்து சமீபத்தில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மருத்துவ செலவு மட்டும் ரூ.6.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவமனைக்கான மொத்த செலவு தொகையில் இருந்து அ.தி.மு.க. சார்பில் ரூ.6.41 கோடி காசோலையாக வழங்கப்பட்டதாகவும், ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 பாக்கி தொகையாக வழங்கவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.



    இந்தநிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு செலுத்தவேண்டிய பாக்கி தொகையான ரூ.44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாயை காசோலையாக வழங்கியதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜெயலலிதா சிகிச்சைக்கான முழு செலவையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அ.தி.மு.க. வழங்கியுள்ளது. #ADMK #JayalalithaaDeath
    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என்று உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். #JayaDeath #JudgeArumugasamy
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி நேற்று ஆஜரானார். முதல்-அமைச்சரின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உளவுப்பிரிவு போலீசார் தான் மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது முதல் அவர் மரணம் அடையும் வரை மருத்துவமனையில் நடந்தது குறித்து நீதிபதி மற்றும் ஆணையம் தரப்பு வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.



    விசாரணையின் போது, ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உளவுப்பிரிவு போலீசார் உடன் சென்றார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று சத்தியமூர்த்தி பதில் அளித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘செப்டம்பர் 21-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி நீங்கள் தானே கண்டறிய வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.



    அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டது தெரியும். ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பு பற்றி எந்த தகவலும் தெரியாது’ என்று பதில் அளித்தார்.

    விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது தெரியுமா? என்று ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தியமூர்த்தி, ‘ஆமாம். சொன்னார்கள்’ என்று பதில் அளித்துள்ளார். ‘பாதுகாப்பு கருதி உங்களது அறிவுரையின் பேரிலேயே கண்காணிப்பு கேமரா எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறதே?’ என்று ஆணையத்தின் வக்கீல்கள் கேட்டதற்கு, ‘நான் எதுவும் சொல்லவில்லை. யாருடைய உத்தரவின் பேரில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது என்பது தெரியாது’ என்று அவர் பதில் அளித்தார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று நீங்கள் அறிவுறுத்தினீர்களா?, இதுதொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் உங்களிடம் ஆலோசனை நடத்தினார்களா?, ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டு பகுதிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் யாரை விடக்கூடாது என்ற கட்டுப்பாடு யாரிடம் இருந்தது? என்று ஆணையத்தின் வக்கீல்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. சசிகலாவை மருத்துவமனையில் நான் சந்திக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு சீருடை அணியாத உளவுப்பிரிவு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளம் முழுவதும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரை பார்க்க யார், யார் வந்தார்கள் என்பது குறித்த விவரம் தன்னிடம் இல்லை.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்த கருப்பு பூனை படைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏன் அவர்கள் பாதுகாப்புக்கு வரவில்லை என்பது தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் நான் முயற்சிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. 
    ×