search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior World Cup of Hockey"

    • மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.
    • நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது.

    கோலாலம்பூர்:

    13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

    இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள 2 முறை சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று வலுவான ஸ்பெயினை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணியின் கையே ஓங்கி இருந்தது. முதலாவது நிமிடத்திலேயே ஸ்பெயின் கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணி வீரர் காப்ரி வெர்டெல் இந்த கோலை அடித்தார்.18-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஸ்பெயின் கேப்டன் ரபி ஆந்த்ரே கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    33-வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் இந்த கோலை அடித்தார். முதல் கோல் அடித்த காப்ரி வெர்டெல் 41-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் கோலடித்து தனது அணியின் முன்னிலையை அதிகரித்தார். 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை ரபி ஆந்த்ரே கோலாக மாற்றினார்.

    கடைசி 5 நிமிடங்களில் இந்திய அணிக்கு 3 பெனால்டி வார்னர் வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் அதனை கோலாக்க இந்திய வீரர்கள் எடுத்த முயற்சியை ஸ்பெயின் கோல்கீப்பர் கேப்லாடெஸ் அருமையாக தடுத்து நிறுத்தினார்.

    முடிவில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சுவைத்து தனது பிரிவில் முதலிடம் வகிக்கிறது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை (4-2) வென்று இருந்தது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    'டி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து முதலாவது வெற்றியை தனதாக்கியது. அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்துடன் (3-3) டிரா கண்டு இருந்தது. இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியை சொந்தமாக்கியது.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. தனது பிரிவில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    • இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன.
    • இந்தியா 3-ல் தென்கொரியா 2-ல் வெற்றி பெற்றுள்ளன.

    கோலாலம்பூர்:

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இன்று தொடங்குகிறது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஸ்பெயின், கனடா, தென்கொரியா ஆகிய அணிகளும் இந்த பிரிவில் உள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா அணிகளும் 'பி' பிரிவில் எகிப்து, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளும், 'டி' பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை இன்று எதிர்கொள்கிறது. இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3-ல் தென்கொரியா 2-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 7-ந்தேதி யும், 3-வது போட்டியில் கனடாவை 9-ந்தேதியும் எதிர் கொள்கிறது. 2001, 2016-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ்-எகிப்து, ஜெர்மனி-தென்ஆப்பிரிக்கா, ஸ்பெயின்-கனடா, அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா, மலேசியா-சிலி அணிகள் மோதுகின்றன.

    ×