search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchi Kamakshi Amman Temple"

    • அன்னை காமாட்சி தேவியைப் போற்றி வணங்குவதற்கேற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்
    • அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே.

    அன்னை காமாட்சி தேவியைப் போற்றி வணங்குவதற்கேற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்


    1. சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

    சோதியாய் நின்ற உமையே,

    சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

    துன்பத்தை நீக்கி விடுவாய்,

    சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்

    துயரத்தை மாற்றி விடுவாய்,

    ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ

    சிறியனால் முடிந்திடாது.

    சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்கச்

    சிறிய கடன் உன்னதம்மா,

    சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீச்வரி

    சிரோன்மணி மனோன் மணியுநீ,

    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

    யனாத ரட்சகியும் நீயே,

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

    அம்மை காமாட்சி யுமையே.


    2. பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

    பாடகந் தண்டை கொலுசும்,

    பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட

    பாதச் சிலம்பின் ஒலியும்,

    முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

    மோகன மாலை யழகும்,

    முழுதும் வைடூரியம் புஷ்ப ராகத்தினால்

    முடிந்திட்ட தாலி யழகும்,

    சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

    செங்கையிற் பொன் கங்கணமும்

    ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

    சிறுகாது கொப்பினழகும் ,

    அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை

    யடியனால் சொல்ல திறமோ

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

    அம்மை காமாட்சி யுமையே


    3. மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ

    மணிமந்திர காரிநீயே

    மாயா சொரூபிநீ மகேஸ்வரியுமான நீ

    மலையரை யன்மக ளான நீ,

    தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ,

    தயாநிதி விசாலாட்சிநீ,

    தரணியில் பெயர்பெற்ற பெரிய நாயகியும்நீ

    சரவணனை ஈன்ற வளும்நீ,

    பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்

    பேறுபெற வளர்ந்தவளும் நீ,

    பிரணவ சொரூபிநீ பிரசன்ன வல்லிநீ

    பிரியவுண்ணா முலையுநீ,

    ஆயிமகமாயிநீ ஆனந்தவல்லிநீ

    அகிலாண்டவல்லிநீயே,

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

    அம்மை காமாட்சி யுமையே.


    4. பாரதனிலுள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்

    பாங்குட னிரட்சிக்கவும்,

    பக்தியாய் உன்பாதம் நித்தம் தரிசித்த

    பாலருக் கருள் புரியவும்,

    சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்

    செங்கலியன் அணுகாமலும்,

    சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

    ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

    பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல்

    பிரியமாய்க் காத்திடம்மா,

    பிரியமா யுன்மீதில் சிறியனான் சொன்னகவி

    பிழைகளைப் பொறுத்து ரட்சி,

    ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

    னம்மை ஏகாம்பரி நீயே,

    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

    அம்மை காமாட்சி யுமையே.

    • அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.
    • காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.

    அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.

    காம என்றால் அன்பு, கருணை. அக்ஷ என்றால் கண். எனவே, காமாக்ஷி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.

    காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்

    அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோவில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றது.

    முக்தியை அளித்திடும் தெய்வத் திருத்தலங்கள் ஏழு. அவை, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை என்பவையாகும்.

    காஞ்சிபுரத் திருத்தலத்துக்கு காஞ்சிபுரம், பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், மும்மூர்த்தி வாசம், பிரமபுரம், காமபீடம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்பீரபுரம், தண்டகபுரம், காஞ்சினபுரம், கச்சி, சத்தியவிரதரேத்திரம் என்னும் பதினைந்து திருநாமங்கள் உண்டு.

    இத்திருத்தலத்தில் முற்காலத்தில் சண்பக மரங்கள் நிறைந்திருந்ததால், சண்பகாரண்யம் என்னும் திருப்பெயரும் உண்டு.

    காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.

    ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி

    ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லக்ஷ்மி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.

    இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.

    பந்தகாசுரன்

    முன்னொரு காலத்திலே, பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் (= அரக்கன்) வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.

    பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.

    பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், "அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது" என்று கூறி, அவர்களை பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

    அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானை குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள்.

    தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டு தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.

    அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள்.

    அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

    சிறு பெண்ணின் உருவத்தில்

    உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

    அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.

    அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள்.

    அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள்.

    தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறி போர் புரிந்தது. இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது.

    அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்கு சிவபெருமானை அழைத்தார். சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன.

    இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.

    அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுரனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

    மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள்.

    அன்னை காமாட்சி தேவி

    ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள். அந்த நன்னாள், ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும்.

    எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள். அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.

    அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் உய்ய அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள்.

    அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அமைந்த அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.

    தற்போது, அன்னை காமாட்சி திருக்கோவில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.

    ×