search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthikai Soma week"

    • சங்காபிஷேக தரிசனம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
    • நாளை கார்த்திகை 2-வது சோம வாரமாகும்.

    கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். இந்த சங்காபிஷேக தரிசனம் நம் வாழ்வில் இதுவரை இருந்த சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு சோமவாரமும் சிவனாருக்கு மிகவும் விசேஷமான நாள். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். சோமன் என்றும் சோமேஸ்வரர் என்றும் இதனால்தான் சிவனாருக்கு திருநாமம் அமைந்தது.

    சோமன் என்றால் திங்கள். திங்கள் என்றால் சந்திரன். அந்த சந்திரனையே பிறையென சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான்.


    அதனால்தான், ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனாரை வணங்குவதும் வழிபடுவதும் மிகுந்த விசேஷமானது என்றும் வியக்கத்தக்க பலன்களை வழங்கவல்லது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேபோல், சனிக்கிழமை வருகிற பிரதோஷமும் திங்களன்று வருகிற பிரதோஷமும் மகத்தானவை. மும்மடங்கு பலன்களை வழங்குபவை என்றும் தெரிவிக்கிறார்கள்.

    எந்த மாதமாக இருந்தாலும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, சிவனாருக்கு சிறப்பான நாள். சிவபெருமானை வழிபடுவதற்கு அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை என்பது இன்னும் விசேஷத்துக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) கார்த்திகை 2-வது சோம வாரமாகும்.

    கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு என்றில்லாமல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்படுகிற அற்புதமான பூஜை.

    தமிழகத்தில் பெரும்பான்மையான சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரத்தில்... சிவனாருக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம், 1008 சங்கால் அபிஷேகம் என்றெல்லாம் நடைபெறுகிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல் கோயில், திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் முதலான பெரும்பான்மையான சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

    கார்த்திகை மாதத்தின் சோம வார நன்னாளில், சோமநாதருக்கு சோமேஸ்வரருக்கு தென்னாடுடைய சிவனாருக்கு குளிரக் குளிர சங்கால் அபிஷேகம் நடைபெறுவதை கண்குளிரத் தரிசியுங்கள். கவலைகளெல்லாம் இனி பறந்தோடும். துக்கங்களெல்லாம் இனி களையப்படும். சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் சிவனார்!


    கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தைக் கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.

    தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன.

    மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லட்சுமி கடாட்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும்.

    எனவே, சங்கின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொண்டு, சோமவார திங்கட்கிழமையான நாளை விரதமிருந்து சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு எண்ணிலடங்கா பலன்களைப் பெறுவோம்.

    ×