search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Church Sex Scandal"

    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கைதான 3வது பாதிரியாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை அடுத்த மல்லப்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பே பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    திருமணத்திற்கு பிறகு இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க அந்த பெண் ஆலயத்திற்கு சென்றார். அங்கு பாவ மன்னிப்பு அறிக்கையிட்டார். பாவமன்னிப்பு கேட்ட பாதிரியார் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார்.

    மேலும் 3 பாதிரியார்களும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜெய்ஸ் கே. ஜார்ஜ், ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி. மேத்யூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    பாதிரியார்கள் 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ 2 நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பாதிரியார்களும் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதில், பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ என்பவர் கோழஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு போலீசார் அந்த வீட்டிற்கு அதிரடியாக சென்றனர்.

    அங்கு மறைந்திருந்த பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூவை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கோழஞ்சேரி தாலுகா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவல்லா முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாதிரியார் ஜாண்சன் வி. மேத்யூ ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் இன்னும் 2 பாதிரியார்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



    ×