search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kirishnan kovil"

    • குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
    • காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.

    குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

    மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

    மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.

    இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    ×