search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollimalai houses"

    குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக கொல்லிமலையில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். #ChildKidnap
    கொல்லிமலை:

    குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழு தொடர்ந்து சுகாதார நிலையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் கொல்லிமலையில் அதிக அளவில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட புகார் எழுந்ததையடுத்து, ஆய்வு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஏற்கனவே செயல்பட்டு வந்த 3 குழுக்களை நிறுத்திவிட்டு, ஆய்வை தீவிரப்படுத்துகின்ற வகையில், புதியதாக 16 குழுக்களை அமைத்து இன்று மற்றும் நாளை (30-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

    இதில் ஒவ்வொரு குழுவிலும் தலா அரசு டாக்டர்-1, சுகாதார மேற்பார்வையாளர்-1, ஆய்வாளர்-1, பகுதி சுகாதார நர்சு-1, சமுதாய சுகாதார நர்சு-1, கிராம சுகாதார நர்சு-1, பயிற்சி பள்ளி நர்சு-1 என 7 பேர் வீதம் இடம் பெற்றுள்ளனர்.

    இன்று காலை 6 மணி முதல் இவர்கள் கொல்லிமலையில் உள்ள 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தங்களது ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் தலா ஒவ்வொரு குழுவாக சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இங்கு பிறப்பு சான்றிதழ் பதிவேடு, ஊழியர்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி பெண்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்த விபரம் பதிவேடு, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பதிவேடுகளில் இருக்கும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று குழந்தைகள் குறித்து பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அரியூர் நாடு, வளப்பூர் நாடு, செம்மேடு, சோளக்காடு, மேக்னிக்காடு உள்பட பல கிராமங்களில் வீடு வீடாக சென்று சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் விபரம் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர்.

    அப்போது அதிகாரிகள் பெற்றோர்களிடம் எப்போது குழந்தை பிறந்தது?, தனியார் மருத்துவமனையா? அல்லது அரசு மருத்துவமனையில் பிறந்ததா?, எத்தனை குழந்தை உள்ளது?, இந்த குழந்தை இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கு படிக்கிறார்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவர்கள் கூறிய தகவல்களை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

    இந்த ஆய்வு பணி நாளை (30-ந்தேதி) முடிவடைந்ததும், இது குறித்த முழுமையான ஆய்வு அறிக்கை சென்னையில் உள்ள தலைமை சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கொல்லிமலை பவர்காடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டிரைவர் முருகேசன் என்பவர் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChildKidnap
    ×