search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kottakudi River"

    • ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை நீடித்து வருகிறது. போடி, குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் பெய்த தொடர் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார வராக நதி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி பகுதியில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு வருகிறது. இதன் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2931 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2481 கன அடி நீர் திறக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளனர்.

    கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அங்கு உற்சாகமாக குளித்து சென்றனர்.


    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. 820 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 290.78 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, தேக்கடி 0.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 15, போடி 11.8, வைகை அணை 24.2, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 15, பெரியகுளம் 31, வீரபாண்டி 19.8, அரண்மனைபுதூர் 20.6, ஆண்டிபட்டி 33.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×