search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "let's love ourselves"

    • உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன.
    • நம்மை நாமே அன்பு செய்வோம், மகிழ்ச்சியாக வாழ்வோம்.

    இந்த உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன. தன் மீது பிறர் அன்பு காட்ட வேண்டும், தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும், மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், தன் செயல்களை அங்கீகரிக்க வேண்டும், தான் சிறப்பாக செயல்பட்டால் பாராட்ட வேண்டும் என ஏதாவதொரு வகையில் பிறர் தன் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதர்களும் ஆசைப்படுவது யதார்த்தமானது.

    அதேபோல தனக்கு பிடித்தமானவரிடம் அளவில்லா அன்பை பொழிவதும், அவருக்கு பிடித்ததை பரிசாக அளிப்பதும், அவரை சந்திக்க அலாதியான விருப்பம் கொள்வதும் பலரது இயல்பாக இருக்கும். தன்னிடம் அன்பு காட்டுபவருக்காக எதையும் செய்ய துணிந்திடுவார்கள். தம்மால் முடியாததையும் தமது சக்திக்கு அப்பாற்பட்டதையும் கூட செய்ய முயற்சி செய்வார்கள்.

     அதேபோலவே நம்மையும் பிறர் அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் நம்மையே அன்பு செய்ய மறந்து விடுகிறோம். இதனையே சுய அன்பு என்று சொல்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். சுய அன்பு என்பது சுய நலம் அல்ல. அது நமது மன நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும் அற்புதமான திறவுகோலாகும்.

    இன்றைய சமூகச்சூழலில் பலர் வாழ்க்கை மீது வெறுப்பு கொள்வதற்கும், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்கும் சுய அன்பு இல்லாததே காரணம். சுய அன்பு என்றால் புரியாத புதிரல்ல, அது மிகவும் எளிதானது. நம்மையே நாம் அன்பு செய்வது என்றால் நம்மையே நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது. நாம் சிகப்போ, கருப்போ, குண்டோ, ஒல்லியோ, குட்டையோ, நெட்டையோ எப்படியாக இருந்தாலும் நாம் நம்மையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள்ளேயே `நான் அழகானவன்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

     ஒருபோதும் நாம் நம்மை பிறரோடு ஒப்பிடவே கூடாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு வகையில் தனித்துவம் ஆனவர்கள். எனவே நமது தனித்துவ பண்பை ஏற்றுக்கொண்டு அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக நம்மையே நாம் அன்பு செய்வோம். அதன் வெளிப்படாக நமக்காக மேற்கொள்ளும் சிறு, சிறு காரியங்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் செய்வோம்.

    அதேபோன்று நல்ல செயலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, அதனை செய்து முடித்து விட்டால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வோம். அதற்கு தக்க சன்மானமாக ஏதாவதொரு பரிசை வாங்கி நமக்கே நாம் அளித்துக்கொள்வோம். அது ஐஸ்கிரீம் வாங்கி ருசித்து சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம். இப்படி செய்வது விளையாட்டாக தெரியலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உளவியல் தாக்கம் பெரியது என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே நம்மை நாமே அன்பு செய்வோம்...! மகிழ்ச்சியாக வாழ்வோம்...!

    ×