search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Chinnapillai"

    கிராமப்புற ஏழை பெண்களுக்காக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    கிராமப்புற ஏழை பெண்களுக்காக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் பில்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெ.சின்னப்பிள்ளை பெருமாள் களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 30 வருடங்களாக கிராமப்புற ஏழை பெண்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகிறார்.

    2 ஆயிரத்து 589 சுய உதவிக்குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றியது மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இதைத் தவிர அவர் கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்திற்காக இலவச மருத்துவ முகாம்கள், வேளாண்மை சார்ந்த பணிகளில் பெண்களை மேம்படுத்துவதற்காக, இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை ஊக்கப்படுத்தி பெரும் பங்காற்றியுள்ளார்.

    அவருடைய மகளிர் மேம்பாட்டுப் பணிகளை பாராட்டி 2000-ம் ஆண்டு மத்திய அரசு, ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது வழங்கியுள்ளது.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தன்னலமற்ற சேவை புரிந்து வரும் பெ.சின்னப்பிள்ளை பெருமாளை கவுரவிக்கும் பொருட்டு, 2018-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வையார் விருதை வழங்கினார். விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    அவ்வையார் விருதை பெற்றுக்கொண்ட சின்னப்பிள்ளை பெருமாள், தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக்கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×