search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahishasura Vatam. Adi Jagannath"

    • 51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.
    • தேவிபட்டினம். பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்த இடம்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றாக திகழ்கிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம். பராசக்தியின் அக்குள் பகுதி விழுந்த இடமாகத் திகழும் இந்த சக்தி பீடம், `வீரசக்தி பீடம்' என்று போற்றப்படுகிறது.

    மகிஷாசுரமர்த்தினி கோபம் தணிந்து அமைதியான வடிவில் இங்கு கோவில் கொண்டிருப்பதாக எடுத்துரைக்கிறது, தேவிபுர மகாத்மியம். அதோடு அட்சர வகைகளில் சாகர எழுத்துக்களும் இத்தலத்து சக்திபீட நாயகியாக விளங்கும் அன்னை உலகநாயகியிடமே தோன்றியதாகவும் தெரிவிக்கிறது தேவிபுர புராணம்.

    மற்ற சக்தி பீடங்களில் உள்ள கரும்பாறை அமைப்பே இங்கும் இருப்பது இந்த வீரசக்தி பீடத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த தேவிகோட்ட பீடத்தில் உள்ள தேவியின் பெயர் `அகிலேஸ்வரி' என பிரஹத்நீலதந்திர நூல் குறிப்பிடுகிறது. இப்பெயரே `உலகநாயகி' என்று தமிழில் வழங்கப்படுகிறது. ராமாயண காவியம் போற்றும் முக்கிய ஷேத்திரம் இது. ராமபிரானது வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத இடமாகத் திகழ்கிறது, இந்த தேவிபட்டினம்.

    முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரிசியான லோகமாதேவியின் பெயரில் `உலகமாதேவிபட்டினம்' என்பதே மருவி தேவிபட்டினம் ஆனது என்று சரித்திரம் விவரிக்கிறது.

    மகிஷாசுர வதம்

    பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன், தேவர்களையும், ரிஷிகளையும் பலவாறு துன்புறுத்தினான். மகிஷாசுரன் தன்னுடைய அழிவு ஓர் பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். எனவே அன்னை பராசக்திக்கு, சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும் அளித்தனர்.

    அதேபோல் இந்திரன் வஜ்ராயுத்தையும், அக்னிபகவான் சக்தி என்னும் ஆயுதத்தையும், எமன் தண்டத்தையும், நிருதி கத்தியையும், வருணன் பாசத்தையும், வாயு பகவான் வில்லையும், குபேரன் பாண பாத்திரத்தையும் வழங்கினர்.

    மேலும் சமுத்திரராஜன் தாமரை மலரை வழங்கினான். சூரியன் ஒளிக்கதிர்களை கொடுத்தார். ஆதிசேஷன், நாக ஆபரணங்களை அளித்தார். சர்வ சக்திகளையும் பெற்ற பராசக்தி, 18 கரங்களில் 18 விதமான ஆயுதங்களை தாங்கி மகிஷாசுரனை வதம் செய்தாள். வதம் புரிந்த உடன் இங்கு வந்து தேவி சாந்தமடைந்து, படுத்தவண்ணம் சுயம்புவாக எழுந்தருளினாள்.

     ராமர் பெற்ற ஆசி

    ராவணனை வெல்லும் நோக்கத்தோடு இலங்கை செல்ல இருந்த ராமர் மற்றும் லட்சுமணர், அனுமன் உள்ளிட்ட வானரப் படையினர் அனைவரும், உப்பூரில் வீற்றருளும் வெயிலுகந்த விநாயகரை வழிபட்டனர். பின்னர் கடற்கரை ஓரமாகவே பயணித்த ராமரும், அவரது படைகளும் தேவிபூர் என்னும் இந்த தேவிபட்டினத்தில் முதலில் திலகேஸ்வரப் பெருமானை வணங்கி, பின் வீரசக்தி பீடத்தில் வீற்றருளும் மகிஷாசுரமர்த்தினியின் மறு உருவமான அன்னை உலகநாயகிக்கு, தீர்த்தம் உண்டாக்கி அபிஷேகித்து ஆன்ம சுத்தி அடைந்தனர். உலகநாயகி அம்மனை வணங்கி அவரது ஆசி பெற்ற பின்னர், கடல் பகுதியில் நவக்கிரகங்களை கல்லால் நிறுவி வழிபட்டனர்.

    அப்போது கடலில் அலைகள் முன்னெழும்பி வரவே, இங்கு அருள்புரியும் ஆதி ஜகந்நாதரை, ராமர் உள்ளிட்ட அனைவரும் ஆராதித்தனர். ஜெகந்நாத பெருமாளின் ஆணைக்கு அடங்கிய அலைகள் பின்னே செல்ல, நவக்கிரக நாயகர்களை நலமுடன் பூஜித்த பிறகு, வானரப் படையுடன் இலங்கை சென்றடைந்தார், ராமபிரான்.

    ஆலய அமைப்பு

    கடற்கரைக்கு சற்று உட்புறமாக அமைதியான சூழலில் அமைந்துள்ளது, உலகநாயகி அம்மன் ஆலயம். கிழக்கு முகமாக ஏழு கலசங்களைக் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கின்றது. நான்கு தூண்களைக் கொண்ட முகமண்டபம் அழகுற காணப்படுகிறது. உள்ளே பலிபீடம், கொடிமரம் மற்றும் சிம்ம வாகனம் உள்ளது. நீண்ட முன் மண்டபம், பதினாறு தூண்களைக் கொண்டு பதினாறுகால் கருங்கல் மண்டபமாக பற்பல சிற்பங்களை தாங்கி நிற்கின்றது. பின் இடை மண்டபம். அடுத்ததாக கருவறை.

    கருவறை உள்ளே சுயம்பு வடிவாய் எழுந்தருளி, பேரருள் பரப்புகின்றாள் உலகத்தையே காத்தருளும் அன்னை உலகநாயகி. சுதையாக முழு உருவச் சிலையும் இங்கு காணப்படுகின்றன. ஆலயத்தைச் சுற்றி வருகையில் அம்பாளின் கருவறை மேலே அமைக்கப்பட்டுள்ள ஏகதள விமானத்தை வழிபடுவது சிறப்பு.

    பிராகாரத்தில் கந்தன், கணபதி மற்றும் நாகராஜர் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய ஆலயம் எனினும் சீருடன் திகழ்கிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. நவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி ஆகிய வருடாந்திர விசேஷங்களும் இங்கு சிறப்புற கொண்டாடப்படுகின்றன.

    இந்த உலகநாயகி அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். மன தைரியம் கூடும். எதிரிகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் ஆலயம் திறந்திருக்கும். சக்தி பீட நாயகியாக மட்டுமில்லாமல் கிராம தேவதையாகவும், பலரது குலதெய்வமாகவும் திகழும் உலகநாயகியை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுவோம்.

    அமைவிடம்

    ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிபட்டினம்.

    ×