search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur fake encounter case"

    மணிப்பூரில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவம் மற்றும் போலீசாரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்கும் சிபிஐ-யிடம் சுப்ரீம் கோர்ட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. #ManipurFakeEncounterCase #CBI
    புதுடெல்லி:

    கடந்த 1979 மற்றும் 2002-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட சட்ட விரோதக் கொலைகளை போலி என்கவுண்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிகழ்த்தியது என அந்த மாநிலத்தின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்திய பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற படுகொலைகளில் இந்திய ராணுவம், அசாம் ரைபிள் படைப்பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், வழக்கு எந்த விசாரணையும் இன்றி இருப்பதாக மீண்டும் ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராக உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று இந்த மனு நீதிபதிகள் லோகுர், லலித் ஆகியோர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் வேனுகோபால், சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராகினர்.

    போலி என்கவுண்டர் வழக்கு ஓராண்டாக நடந்து வந்த நிலையில் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? என நீதிபதிகள் சிபிஐ இயக்குநரிடம் கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    வழக்கில் யாரை கைது செய்ய வேண்டும் என்பதை சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறோம் என நீதிபதிகள் கூறினர். மேலும், 5 குற்றப்பத்திரிகைகள் அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ இயக்குநர் உறுதியளித்தார்.

    இந்த வழக்கில் சிபிஐ-யின் விசாரணை பரமபத விளையாட்டை போல இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்கை அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைக்கும் சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×