என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maragata Nataraja"
- சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர்.
- சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார்.
சித்திரை – திருவோணம் உச்சிக்காலம், ஆனி – உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி – வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி – வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி – திருவாதிரை உஷத்காலம், மாசி – வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.
விக்கிரகமாக மாறிய சிவனடியார்!
கும்பகோணம் அருகில் உள்ள ஊர் கோனேரிராஜபுரம். இங்குள்ள சிவாலயத்தில் காட்சி தரும் நடராஜர் விக்கிரகம் விசேஷமானது. பஞ்சலோகத்தால் ஆன இந்த விக்கிரகத்தின் மார்பில், மனித உடலில் இருப்பது போன்று ஒரு 'மரு'வையும் முடியையும் காணலாம்!
சோழ மன்னன் ஒருவரது கனவில் தோன்றிய இறைவன், கோனேரி ராஜபுரம் சிவாலயத்தில் நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி பணித்தார். சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து அவரிடம், '`கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை 90 நாள்களுக்குள் வடிக்கவேண்டும்" என்று கட்டளையிட்டார் மன்னர். சிவ பக்தரான அந்தச் சிற்பி, இறைவனை வணங்கி, விக்கிரகப் பணியைத் தொடங்கினார். ஆனால், அது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை விரைவில் புரிந்துகொண்டார். ஒவ்வொரு முறையும் அவர், பஞ்சலோகத்தை உருக்கி, அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தென்படும்; விக்கிரகம் முழுமை அடையாது! சிற்பி எவ்வளவோ முயன்றும், காரணத்தை அறிய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. பணி எந்த அளவில் உள்ளது என்பதை அறிய சிற்பக்கூடத்துக்கு வந்தார் மன்னன். `விக்கிரகம் இன்னும் தயாராக வில்லை!' என்பதை அறிந்து சினம் கொண்டவர், '`இன்னும் இரண்டு நாள்களில் விக்கிரகம் தயாராக வில்லையெனில், உம் தலை தரையில் உருளும்!'' என்று கூறிவிட்டு, ஆவேசத்துடன் கிளம்பிச் சென்றார். கவலையில் ஆழ்ந்த சிற்பி, `அம்பலவாணா… இது என்ன சோதனை!'' என்று இறைவனையே தியானித்து கண்ணீர் வடித்தார். அவர் அருகில், பெரிய உலைகலன் ஒன்றில் பஞ்சலோகம் கொதித் துக்கொண்டிருந்தது.
அப்போது, `ஐயா' என்ற அழைப்பொலி கேட்டு, வாயிலுக்கு வந்தார் சிற்பி. அங்கு வயதான சிவனடியார் ஒருவர் நின்றிருந்தார். `ஐயா, தாகம் உயிர் போகிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்…
சுடுதண்ணீராக இருந்தால் நன்று!'' என்றார் சிவனடியார். சிற்பிக்கோ எரிச்சல்! இன்னும் இரண்டு நாள்களில் என் தலை உருளப்போகிறது;
இவருக்குச் சுடுதண்ணீர் வேண்டுமாம்!' என்று சலித்துக்கொண்டவர், `உள்ளே, உலை கலனில் கொதிக்கிறது… போய்க் குடியுங்கள்!'' என்றபடி வெளியே அமர்ந்துவிட்டார்.
சிவனடியார் உள்ளே சென்றார். நன்கு கொதித்துக் கொண்டிருந்த பஞ்சலோகத் திரவத்தைக் குடித்தார். மறுகணமே நடராஜர் விக்கிரகமாகவே உறைந்தார் சிவனடியார். அவரைக் காணாது உள்ளே வந்த சிற்பி, விக்கிரகத்தைக் கண்டார். அதன் மார்பில் ஒரு மரு; மருவில் ஒரு முடி! `என்ன அதிசயம்… சிவனடியார் மார்பில் இருந்தது போன்றே இந்த விக்கிரகத்திலும் மருவும் முடியும் உள்ளனவே… அப்படியானால் வந்தது யார்?' என்று வியந்தவர், எல்லாம் சிவனருள் என்பதை உணர்ந்து, கண்ணீர் மல்க ஆடல்வல்லானை வணங்கிப்பணிந்தார்.
ஒரு சிற்பியும் ஐந்து விக்கிரகங்களும்!
பல்லவ வம்சத்தின் சிம்மவர்ம பல்லவர் மிகச் சிறந்த சிவபக்தர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் இயற்றும் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அதற்காக சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார்.
கடைசியாக சோழ தேசத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரைக் கண்டார். அவர் பெயர் நமசிவாயமுத்து. அவரும் சிறந்த சிவபக்தர். அவரிடம் நடராஜர் திருவுருவத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். மன்னரின் விருப்பப்படி நமசிவாய முத்து அதியற்புதமான தோற்றத்தில் நடராஜர் சிலையை வடிவமைத்தார். அந்த செப்புச் சிலையின் அழகில் மயங்கிய மன்னர், `செப்பில் செய்த விக்கிரகமே இவ்வளவு அழகாக இருந்தால், தங்கத்தில் வடித்தால் என் ஐயனின் திருவுருவம் இன்னும் எத்தனை பொலிவாக இருக்கும்!' என்று வியந்து, சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து சிலை வடிக்கச் சொன்னார்.
சிற்பியும் தூய தங்கத்தில் சிலையைச் செய்தார். சிலையை வடித்துவிட்டுப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே இருந்தது. சிற்பி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த மன்னர், சிற்பியை சிறையில் அடைத்துவிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய ஈசன், `சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்க சிலையை நானே செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாகவே இருக்க விரும்புகிறேன். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் தமிழகத்துக்கு செல்ல ஏற்பாடு செய்' என்று உத்தரவிட்டார்.
சிற்பி இரண்டாவதாகச் செய்த சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டதுடன், முதலில் செய்த சிலையை சிற்பியிடன் கொடுத்து தென்பகுதிக்குச் செல்லும்படிக் கூறினார்.
செப்பறையில் ஒலித்த சிலம்பொலி!
முதலில் வடித்த நடராஜரின் செப்புச்சிலையுடன் தென் பகுதிக்குப் புறப்பட்ட சிற்பியின் பாதுகாவலுக்காக மன்னரின் படைவீரர்கள் சிலரும் உடன்சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது சிலையின் எடை அதிகரித்தது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும் படைவீரர்களிடம் சிலையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கும்படிக் கூறினார். சற்று நேரம் உறங்கிய வீரர்கள் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது சிலையை அங்கே காணவில்லை.
அதனால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த சிற்பி, அந்த பகுதியை ஆண்டு வந்த மன்னர் ராம பாண்டியனிடம் முறையிட்டனர். தன்னுடைய நாட்டில் நடராஜர் சிலை காணாமல் போனதால் மனம் வருந்திய ராமபாண்டியன், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையைத் தேடிச் சென்றார். வழியில் காட்டுக்குள் இருந்து சிலம்பு சத்தம் கேட்டது. சிலம்பொலி கேட்ட இடத்தை நோக்கி மன்னர் தன் படைவீரர்களுடன் சென்று பார்த்தார்.
ஓரிடத்தில் எறும்புகள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். எறும்புகளைத் தொடர்ந்து சென்ற மன்னர், ஓரிடத்தில் செப்புச் சிலை இருப்பதைக் கண்டார். அப்போது, `மன்னனே, இதுவே எமக்கு உகந்த இடம்.
இந்த இடத்தில் எனக்கு ஒரு கோயிலை எழுப்பி, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்' என்று ஓர் அசரீரி கேட்டது. அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமபாண்டிய மன்னர் ஓர் ஆலயம் அமைத்து, நித்திய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். சிற்பியால் செய்யப்பட்ட நடராஜரின் முதல் செப்புச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம்தான் செப்பறை.
கட்டாரிமங்கலம்
செப்பறையில் இருப்பதுபோலவே தான் தினமும் வழிபடும் நெல்லையப்பர் கோயிலிலும் நடராஜரின் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பிய ராமபாண்டியன், அதே சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை வடிக்க விரும்பினார். அதே தருணத்தில் ராமபாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்ட வீரபாண்டியனும் தன்னுடைய ஆளுகையின் கீழுள்ள கட்டாரி மங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பினான். ராமபாண்டியன் அதே சிற்பியிடம் இரண்டு நடராஜர் சிலைகளை வடிக்கும்படிக் கூறினார்.
சிற்பியும் இரண்டு செப்புச் சிலைகளை வடித்து முடித்தார். தன்னுடைய சிலையை வாங்கிப் போக வந்த வீரபாண்டியன் சிலைகளின் அழகில் மயங்கிவிட்டான். இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்லவேண்டுமென்று பேராசைப் பட்டான். அத்துடன் நிற்காமல், சிற்பி அதேபோல் அழகான நடராஜர் சிலைகளை வேறு யாருக்கும் செய்து கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கைகளைத் துண்டித்தான். பின்னர், அவனுடைய படைவீரர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரண்டு நடராஜர் சிலைகளையும் எடுத் துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரி மங்கலம் சென்று, அங்கே ஒரு நடராஜரைப் பிரதிஷ்டை செய்தனர்.
கரிசூழ்ந்தமங்கலம்
இரண்டாவது படைப்பிரிவினர், வேறு வழியில் சென்றுகொண்டிருந்தபோது வழியில் தாமிரபரணி குறுக்கிட்டது. தாமிரபரணிக்கும் நடராஜப் பெருமானின் திருமேனியைத் தழுவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலும்; வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்தாள். படைவீரர்கள் அனைவரும் சிலையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சிலநாள்களுக்குப் பிறகு தாமிரபரணியில் வெள்ளம் வடிந்ததும் நடராஜரின் செப்புச் சிலை கரையில் ஒதுங்கியது. அந்தப் பகுதி மக்கள் அந்த விக்கிரகத்தை ஓரிடத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் செய்தியை கேள்விப்பட்ட ராம பாண்டியன், அந்த நடராஜரை நெல்லையப்பர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பி எடுத்துச் செல்ல வந்தார். ஆனால், அந்தச் சிலையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை.
அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய இறைவன், தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், தனக்கு அங்கே ஒரு கோயில் கட்டும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு நான்காவது நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஊர்தான், கரிசூழ்ந்தமங்கலம்.
கன்னத்தில் கிள்ளிய சிற்பி!
மன்னர் ராமபாண்டியர் கையை இழந்த சிற்பிக்கு மரத்தினாலான கையைப் பொருத்தினார். மரக்கை பொருத்தப்பட்டு, சிற்பி தன்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து மற்றொரு நடராஜர் சிலையை வடித்தார். சிலையை வடித்து முடித்ததும், தான் முன்பு வடித்த நான்கு சிலைகளைவிடவும் இந்த ஐந்தாவது நடராஜர் சிலை மிகவும் அழகாக இருப்பதைக் கண்ட சிற்பி, அந்தச் சிலையின் அழகில் மயங்கியவராக, அந்தத் திருமேனியின் கன்னத்தில் மெள்ள கிள்ளினார். அவர் கிள்ளிய வடு சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. அந்த சிலை கருவேலங்குளத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தில்லை நடராஜர்
ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கிவைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் கருவறையின் வலது புறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜ பெருமான், ஸ்படிகலிங்கம் என தில்லையில் மூன்று வடிவங்களில் அருள்கிறார் சிவனார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயி லில் ஐந்து படிகள் அமைந்துள்ளன என்பர்.
சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம் என்ற தேவசபை. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. கொடி மரத்தின் தென்புறம் உள்ள இது, நிருத்த சபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்கு மிடம் ஆயிரம் கால் மண்டபம். இது ராஜசபை.
குடகத் தில்லை அம்பலவாணன்
சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு தில்லையம்பலத்தானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற, பட்டீஸ்வர நடராஜர் ஆனந்த தாண்டவத்தில் தரிசனம் தந்தார். இதன் காரணமாக இங்கிருக்கும் நடராஜருக்கு `குடகத் தில்லை அம்பலவாணன்' என்ற என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
பஞ்ச நதன நடராஜர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பாடாலூர். இங்கிருந்து புள்ளம்பாடி எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊட்டத்தூர். இத்தலத்தின் ஸ்ரீபஞ்ச நதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது.
திருவெண்காடு நடராஜர்
திருவெண்காடு தலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான், ஈரேழு பதினான்கு புவனங் களைக் குறிக்கும் வகையில் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நம: வரையுள்ள 81 பத மந்திரங்களைக் குறிக்கும் 81 வளையங்கள் கோக்கப்பட்ட அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத் துண்டுகள் கோத்த ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகளுடன் காட்சி தருகிறார்.
திருநல்லம் நடராஜர்
கும்பகோணம் அருகே நல்லம் என்ற திருத் தலத்தில் அருளும் நடராஜரை உற்று நோக்கினால், அவரது கையில் உள்ள ரேகைகளும், காலில் உள்ள நரம்புகளும் தென்படுமாம். இங்கு நடராஜரை தொலைவிலிருந்து பார்த்தால் முதியவரைப் போலவும், அருகில் சென்று பார்த்தால் இளை ஞரைப் போலவும் இரண்டு திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.
மயூரநாதர்
பொதுவாக சிவன் கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இந்தத் தலத்தில் அம்பிகைக்காக ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால், இங்குள்ள நடராஜரை `மயூர தாண்டவர்' என்கிறார்கள். மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் இருக்கும் ஜுரஹர தேவரை தரிசித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.
மரகத நடராஜர்
உத்திரகோசமங்கையில், மரகத நடராஜரை ஆருத்ரா அன்று மட்டுமே பூரணமாக தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் சந்தனக்காப்புடன் காட்சி தருகிறார். இறைவன், உமையவள் மட்டும் கண்டு மகிழும்படி ஆடியது இத்தலதில்தான். `உத்திரம்' என்ற சொல்லுக்கு `உபதேசம்' என்ற பொருளும் உண்டு. `கோசம்' என்றால் `ரகசியம்'. அம்பாளுக்கு பிரணவத்தை ரகசியமாக உபதேசித்த இடம் என்பதால், உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது இத்தலம்.
- சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.
- ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.
உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் பழம்பெருமை மிக்கது. ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள்.
ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து. `நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்' எனக் கூறிச் சென்றார்.
சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.
சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக் காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது `அக்னி தீர்த்தம்' எனப் பெயர் பெற்றது.
அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்க வாசகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
பொதுவாக, ஒரு கோவிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் இது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.
ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும்தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.
சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.
அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொரள் பெருக்கமும் ஏற்படும்.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
- நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும்.
- குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை.
உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை.
1970-ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் வெல்டிங் மிஷின் வைத்தபோது வெல்டிங் வைத்தவனுடைய இடது கை பூட்டாக மாறியதால் தன் கையை வெல்டிங் வைத்து எடுக்கவும், கை இரண்டு துண்டாக விழுந்தவுடன் உணர்வு வந்தது.
உடனே கொள்ளை கும்பல் பயந்து அருகில் இருந்த ஐம்பொன் நடராஜர் சிலையை எடுத்தக் கொண்டு காரில் தப்பித்து ஒருகல் தொலைவில் போகும்போது கொள்ளையர்களுக்கு கண் தெரியாமல் போய் விட்டது.
உடனே ரோட்டுக்கு அருகிலுள்ள கண்ணாங்குடி கிராமத்துக்குச் சொந்தமான தண்ணீர் உள்ள குளத்தில் சிலையை போட்டு விட்டனர். அதன் பிறகே கொள்ளையர்களுக்கு கண் தெரிந்தது. உடனே தப்பி விட்டார்கள்.
நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட விபரம் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
கண்ணாங்குடியை சேர்ந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனால் கண்ணுக்குத் தென்பட்டது சிலை. குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை. இந்த சிலையை கண்ட மக்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். பின்பு சிலை ராமநாதபுரம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
மாலிக்காபூரிடம் இருந்து தப்பிய சிலை
தென் இந்தியாவுக்கு படையெடுத்து வந்து இந்து கோவில்களை சூறையாடிய மாலிக்காபூர் ஒற்றர்கள் மூலம் உத்தரகோசமங்கை நடராஜர் கோவிலில் மரகதம் இருப்பதை அறிந்து கொண்டான்.
உடனே உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத கல் நடராஜர் சிலையை கொள்ளையடிப்பதற்கு வேண்டி பெரும் படைகளுடன் சென்றான். உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும். இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.
மாலிக்காப்பூர் உத்திரகோசமங்கை கோவிலை நெருங்கும்போது தான் வைத்திருந்த கோவில் வரைபடத்தை தொலைத்து விட்டார். இதனால் அவனும் அவன் படையினரும் உத்திரகோசமங்கைக்கு செல்வதற்கு பதில் ராமநாதபுரத்துக்கு சென்று விட்டனர். ஈசனே அவர்களை திசை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
மாலிக்காபூர் ராமேஸ்வரம் கோவிலில் கொள்ளையடிக்க பொருள்கள் இல்லாமல் கருங்கல்லை எடுத்துச் சென்றார். இந்தியா வரலாற்றில் அலாவுதீன் கில்சிங்படை தளபதி மாலிக்காப்பூர்தான் உத்திரகோச மங்கை வழியாக ராமேஸ்வரம் வரை கொள்ளை அடித்தாக வரலாறு உள்ளது. ஆனால் அவன் கையில் பச்சை கல் நடராஜர் சிலை சிக்காமல் போனது ஈசன் அருளால் நடந்ததாகவே பக்தர்கள் இன்றும் நம்புகிறார்கள்.
தாயுமானவர்
தாயுமானவர் இறுதியாக ராமநாதபுரம் வந்து உத்திரகோசமங்கை திருத்தலத்திற்குச் சென்று சிவனைப் பற்றி மனமுருகப் பாடல்களை பாடினார். இந்தப் பகுதியில் 5 வருடங்களாக மழை பெய்யாமல் பஞ்சம் நிலவியது.
ஆடு மாடுகள் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்தது. மக்கள் கடும் பஞ்சத்தால் பிழைப்புக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள்.
தாயுமான சுவாமிகள் ஈசன், ஈஸ்வரியின் பாதத்தை கெட்டியாக அணைத்தபடி மனமுருக பாடல்களை பாடினார். வான்மழை விடாது பெய்யத் தொடங்கியது.
அந்த வான்மழையிலும் இறைவனின் அருள் மழையிலும், அன்று ஒரே நாளில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரம்பி விட்டது. மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயம் விளைந்தது. மக்கள் பசியின்றி வாழ்ந்தார்கள்.
- நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.
- பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.
ராமேசுவரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மரைக்காயர் என்ற மீனவர் பாய்மரப்படகு வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் சூறாவளியாக உருவெடுத்து தாக்கு பிடிக்க முடியாதபடி புயல் காற்று வீசியது.
பயங்கர இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. அதனால் மரைக்காயரின் பாய்மர படகு திசை மாறிச் சென்றது. படகு எங்கு செல்லுகிறது என்று தெரியாமல் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது.
கடல் நடுப்பகுதிக்கு படகு சென்று விட்டது. அப்போது திடீரென்று கடல்பாசி படிந்த பச்சை நிறத்துடன் கல்பாறையில் பாய்மரப் படகு மோதியது.படகு மோதிய வேகத்தில் அந்த பாறை மடமடவென்று படகின் மேலே விழுந்தது. மற்றும் இரண்டு பாறை கல் துண்டுகளும் விழுந்தன. அந்த நேரத்தில் புயல் காற்றும் பேய்மழையும், உடனே நின்று விட்டது.
இதையறிந்த மரைக்காயர் தன் உயிரை காப்பாற்றியது இந்த பாறைக்கல்தான் என்று நினைத்தார். எப்படியும் அந்த பச்சை கல்லையும், 2 கல் துண்டுகளையும் ஊர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி பச்சை நிறக்கல் மற்றும் 2 கல் துண்டுகளுடன் படகை ஓட்டிக் கொண்டு மண்டபம் வந்து சேர்ந்தார்.
காணாமல் போன மரைக்காயரைக் கண்டு அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மரைக்காயர் தான் கொண்டு வந்த பாசிபடிந்த பாறைக்கல்லை தன் வீட்டுக்கு முன் வாசல் படிக்கல்லாக போட்டு விட்டார். இந்த வாசல் படிக்கல்லின் மேல் நடக்க நடக்க நாளடைவில் கல்லில் படிந்திருந்த கடல் பாசிகள் முழுவதும் போய்விட்டது. இதனால் பளபளவென்று பச்சை நிறத்தில் மின்னியபடி மிக அழகாக கல் கிடந்தது.
இதை கண்ட மரைக்காயர் குடும்பத்தினர் பச்சை நிற கல்லின் அழகைக் கண்டு இந்த கல்லை மன்னருக்கு கொடுத்தால் நமக்கு ஏதாவது பொருள் கொடுப்பார் என்று நினைத்து மன்னருக்கு தெரிவித்தனர்.
பாண்டிய மன்னன் தனது ஆட்களை மண்டபத்திலுள்ள மரைக்காயர் வீட்டுக்கு அனுப்பி பச்சை நிறக்கல்லை அரண்மனைக்கு எடுத்து வரும்படி உத்தரவிட்டார். பணியாட்கள் மரைக்காயர் வீட்டில் உள்ள பச்சை நிறக்கல்லை அரண்மனையில் சேர்த்தார்கள்.
அந்த கல்லை கண்ட மன்னன் விலைமதிக்க முடியாத மரகத கல்லைக்கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த பச்சை மரகத கல்லைக் கொண்டு உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு ஊத்துவதாண்டவம் நடனத்தை அப்படியே நாட்டியம் ஆடும்படி சிலை வடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார் மன்னர்.
நடராஜர் சிலையை வடிக்க தலைசிறந்த சிற்பியைத் தேடிக்கொண்டு வரும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டார். ஒற்றர்கள் தனித்தனியாக பல நாடுகளுக்கு அதாவது பாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு போன்ற நாடுகளில் மூலை முடுக்கெல்லாம் தேடியும் சிலை வடிக்கும் சிற்பி கிடைக்கவில்லை. இதனால் மன்னன் மிகுந்த கவலை கொண்டு இருந்தார்.
ஒருநாள் மன்னர் இரவில் உறங்கும்போது ஈசன் கனவில் தோன்றினார். இலங்கை வேந்தன் முதலாம் கயவாகு என்பவரின் அரண்மனையில் சிவபக்தனான ரத்தினசபாபதி என்ற தலைசிறந்த சிற்பி இருப்பதாக தெரிவித்தார்.
உடனே பாண்டிய மன்னன் இலங்கை வேந்தன் முதலாம் கயவாகுவை தொடர்பு கொண்டு, சிற்பியை அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார். அதன்படி ரத்தினசபாபதி என்ற சிற்பியை உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு அழைத்து வந்து சேர்த்தார்கள். அவர்தான் பச்சை கல் நடராஜர் சிலையை வடித்தார்.
இலங்கை சிற்பி வடித்த சிலை
இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலை வடிக்கும் தலைசிறந்த சிற்பியான ரத்தின சபாபதி என்பவரிடம் பாண்டிய மன்னன் சிலை வடிக்க வேண்டிய வரைபடங்களையும், ஆருத்ரா தரிசனம் ஊத்துவதாண்டவம் நடராஜன் ஆடிய நடனத்தையும் தெளிவுபட விளக்கினார்.
சிற்பி பச்சை மரகதகல்லில் நடராஜர் சிலையை செதுக்க ஆரம்பித்தார். முதலில் இரண்டு துண்டுகளாக இருந்த பச்சை மரகதகல்லை மிக அழகான வடிவம் அமைத்து இரண்டு துண்டுகளையும் மன்னரிடம் ஒப்படைத்தார் சிற்பி.
மன்னர் ஒருதுண்டு பச்சை மரகத கல்லை பழனி முருகன் கோவிலின் அடிப்பீடத்தில் வைத்தார். மற்றொரு துண்டை மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடிப்பீடத்தில் வைத்தார். சிற்பி பச்சை மரகத கல்லில் 5 அடி உயரம் சிலையும், 1 அடி உயரம் பீடமும் சேர்த்த ஏழு அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலையாக வடித்தார்.
அந்த சிலை நடராஜர் உருவத்தில் பரதநாட்டிய கலையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிலையாக இருந்தது. இந்த நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது. இந்த சிலை ஒளி வெள்ளத்தில் உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பது போல் தத்ரூபமாக வடித்துள்ளார்.
நடராஜர் சிலையை நாம் நேரில் பார்க்கும்போது அச்சு அசலாக பரதநாட்டியம் ஆடுவது போன்று காட்சியளிக்கும். இந்த சிலையை நேரில் கண்டவர்கள் கண்ணைக் கவரவும், பார்த்தவர்கள் பரவசம் அடையவும், சிலை வடித்தவுடன் மக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பச்சை மரதக கல்லினால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலையின் மேல் சூரிய ஒளிபட்டு கோவிலே இரண்டாக பிளந்துள்ளது.
சிலையைப் பார்க்க வந்த பக்தர்கள் ஏற்படுத்திய பேச்சு சலசலப்பு சத்தமும், மேளத்தாள இசைகள், ஒலி, ஒளி முதலிய பேரொளிகள் நடராஜன் சிலை மேலேபட்டு அதிர்வுகள் ஏற்படுத்தின. இதை அறிந்த சிற்பி, எப்படி இந்த விக்கிரகத்தை காப்பாற்றுவது என்று நினைத்து மிக வேதனைப்பட்டு குழம்பிய நிலையில் ஈசன் காலடியில் மன்றாடி வழிமுறைகளைக் கேட்டார். உடனே ஒரு அசரீரி தோன்றியது.
உத்தரகோசமங்கை திருத்தலத்தில் முன்விட்ட பார்வதி சாபத்தால் எனது உருவம் பொறிக்கப்பட்ட விக்கிரகம் பச்சை மரகத கல்லால் ஆனது. இந்த பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.
மத்தளம் முழங்க, மரகதம் உடையும் என்ற சொல்லுக்கேற்ப எனது உருவச்சிலையை ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பூசியவடியும் என்று கூறினார். பிறகு மார்கழி மாதம் பவுர்ணமி அன்று சந்தனத்தைக் கலைத்து ஒரு நாள் மட்டும் எனது முழு உருவத்தை பக்தர்கள் பார்க்கலாம் என்று கூறினார். எனது அனுமதி இல்லாமல் என் விக்கிரகத்தை மன்னரோ, மந்திரியோ, மக்களோ, திருடனோ, அரசியல்வாதிகளோ எடுத்துச் செல்ல முடியாது என்றும், அப்படி எடுக்க நினைப்பவர்களுக்கு உடனே கிறுக்கு(பித்து) பிடித்து விடும் என்றார்.
அன்னியர்கள், யாத்ரீகர்கள் உத்தரகோசமங்கை மண்ணில் உட்கார்ந்து எழும்பும்போது கையை அசைத்துப் பின்புறமாக மண்ணை தட்டிச் செல்ல வேண்டும். அப்படி தட்டிச் செல்லாதவர்களுக்கு சிவன் உத்தரகோச மங்கையில் ஒருதுளி மண்ணை எடுக்க கூட சம்மதிக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.
பிரமாண்ட மணி
உத்திரகோசமங்கை திருத்தலத்தில் பல டன் எடை கொண்ட மிகப்பெரிய மணி ஒன்று உள்ளது. அதன் சத்தம் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் எனவே மணி ஓசை கேட்கும் எல்லை வரை சிவதலமாகும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே உத்திரகோசமங்கை மற்றும் சுற்று வட்டார ஊர்களிலுள்ள ஆண்கள் உழைத்து, தான் ஈட்டிய பொருள்களை அவர் அவர் மனைவி கையில் கொடுத்து வாங்கினால்தான் குடும்பம் முன்னேற்றமடையும் என்பது ஐதீகமாகும்.
- சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார்.
- மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.
ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது.
பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார்.
இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.
எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும். ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42-ம் ஆகும்.
ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தரகோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார். அந்த 4 தாண்டவங்கள் வருமாறு:-
ஆனந்த தாண்டவம், சந்தியத் தாண்டவம், சம்விஹார தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம் ஆகும். அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று. அவை (1) திரிபுரந்தர தாண்டவம் (2) புஜங்கத் தாண்டவம் (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.
இந்த ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள். இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்குச் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
கன்னி பெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும். ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.
அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.
உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு. முக்தி கிடைக்க வழி செய்யும்.
மனதை கவரும் மரகத நடராஜர்
உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆனது. அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.
ஒளிவெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.
இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதிதைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதையடுத்து அன்று இரவு சரியாக 12 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.
திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப்பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.
அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசை யில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகத நடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.
இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம். வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.
முதல் பூஜை அம்பிகைக்கே....
நடராஜர் சன்னத்திக்கு பின்புறம் பிரகாரத்தில் ஒரு அம்பிகை சன்னதி இருக்கிறது. ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாளில் இவளுக்கு பிட்டு, களி நைவேத்யம் படைத்து, மஞ்சள் பயிறு சாத்தி விசேஷ பூஜை நடக்கிறது. அதன் பின்பே நடராஜருக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த அம்பிகை, திருவாதிரை விரதம் இருந்து சிவனருள் பெற்றார். இதன் அடிப்படையில் இவளுக்கு முதலில் பூஜை செய்யப்பட்டு அதன் பின்பு சிவனுக்கு பூஜை செய்வார்கள்.
மங்களம் உண்டாகும்
திருத்தலத்தை மிதித்தாலே மங்களம் யாவும் கைகூடிவரும் என்பதால் இங்கு எழுந்தருளி உள்ள இறைவர் இறைவிக்கு மங்களநாதர், மங்கள நாயகி எனத்திருமங்கள் வழங்குகின்றன.
சிவபெருமானை வழிபட்ட ஆயிரம் சிவவேதியர்களும் ஒவ்வொரு லிங்க வடிவில் இறைவனோடு ஒன்றினர். அதுவே இங்கு சஹஸ்ரலிங்கமாக தரிசனம் தருகின்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்