search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marainthirunthu Parkkum Marmam Enna Review"

    ராஹேஷ்.ஆர் இயக்கத்தில் துருவ் - ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா நடிப்பில் வெளியாகி இருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் விமர்சனம். #MIPMEReview #Dhruvaa #AishwaryaDutta
    நாயகன் துருவ் கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீடு வீடாக கேஸ் சப்ளை செய்து வரும் துருவ், ஒரு நாள் நடுரோட்டில் பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் திருடுபவர்களை பார்க்கிறார்.

    பறித்து சென்றவர்களை துரத்தி சென்று, அவர்களை அடித்து அந்த செயினை எடுத்து செல்கிறார். இதையடுத்த மைம் கோபியின் செயின் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள், துருவ் யார் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார் துருவ்.



    துருவ்வை கொல்ல நினைக்கும் நிலையில், துருவ்வும் அவர்கள் கும்பலில் ஒரு ஆளாக சேர்ந்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் செயின் திருடும் கும்பலை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் போலீஸ் அதிகாரி ஜே.டி.சக்ரவர்த்தி.

    இறுதியில் ஜே.டி.சக்ரவர்த்தி செயின் திருடும் கும்பலை பிடித்தாரா? நாயகன் துருவ் செயின் திருடனாக மாற காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துருவ், ஆக்‌ஷன், காதல், எமோஷனல் என்று நடிப்பில் குறை வைக்கவில்லை. துறுதுறுவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா தத்தாவும், பிற்பாதியில் துருவ்விற்கு மனைவியாக வரும் அஞ்சனாவும் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    துருவ்விற்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், தனக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, அருள்தாஸ், மைம் கோபி என அனுபவ நடிகர்களும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.



    தினசரி செய்திகளில் ஒன்றாகிப்போன செயின் பறிப்பு சம்பவங்களின் பின்புலத்தில் உள்ள நெட்வொர்க் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ராகேஷ். அதை சமூக விழிப்புணர்வு படமாக தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள். வலிமையான கதையாலும், சுளீர் வசனங்களாலும் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ். படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதிக நகைகள் அணிந்து செல்லும் பெண்களுக்கு இப்படம் ஒரு பாடமாக அமையும். அதுபோல், இது சாதாரண திருட்டு மட்டுமில்லாமல், பெரிய கும்பல் இருக்கிறது என்றும், இதனால் பலர் உயிர் இழக்கும் அபாயமும் இருக்கிறது என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.

    அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திகில் கூட்டியிருக்கிறது. பிஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளை துல்லியமாக காட்டி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ விறுவிறுப்பு. #MIPMEReview #MarainthirunthuParkkumMarmamEnnaReview #Dhruvaa #AishwaryaDutta

    ×