search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Admission ANVARA RAJA"

    மத்திய அரசு அறிவிப்பு தாமதமானதால் இந்த ஒருவருடம் மட்டும் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. #NEET #DelhiHighcourt
    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் அகில இந்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி நாடு முழுவதும் நீட் தேர்வு அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்க முடியும்.

    தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்த வருடம் மத்திய அரசு வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க செல்லக்கூடிய மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்தது.

    இதனால் ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பிய மாணவர்கள் செல்ல முடியாமல் தடை பட்டது.

    இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு வருவதற்கு முன்பே ரஷியாவில் சவ்வரப்பூல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 56 மாணவர்கள் சேர்க்கை பெற்றுவிட்டனர். சாகுல்அமீது உள்ளிட்ட 56 பேர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


    சென்னையில் உள்ள ஏ.ஜெ.டிரஸ்ட் மூலமாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர்கள் இந்த ஒரு வருடத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும், மத்திய அரசினுடைய அறிவிப்பு தாமதமாக வெளியானதால் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

    மாணவர்கள் தங்களது கோரிக்கையினை மத்திய சுகாதார துறைக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் முறையிட வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    அதன் அடிப்படையில் தமிழக எம்.பி.க்கள் அன்வர் ராஜா, பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்டவர்களுடன் மத்திய சுகாதாரத்துறையிடம் முறையிட்டனர். ஒரு வருடம் மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதற்கிடையில் டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. வெளிநாடுகளில் எம்.பி. பி.எஸ். படிக்க பதிவு செய்யும் மாணவர்களுக்கு இந்த ஒரு வருடம் மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதுகுறித்து ஏ.ஜே.டிரஸ்ட் கல்வி ஆலோசனை இயக்குனர் டாக்டர் நஜுரல் அமீன் கூறியதாவது:-

    ரஷியாவில் எம்.பி.பி.எஸ். படிக்க அட்மி‌ஷன் பெற்ற மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த வருடம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளி நாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த வருடம் நீட் தேர்வு அவசியம் இல்லை. ரஷியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பினால் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். உடனே சேர்ந்து படிக்க முடியும் என்றார். #NEET #DelhiHighcourt
    ×