search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meeting of farmers"

    கர்நாடக மாநில விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்வது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல் மந்திரி குமாரசாமி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளராக போட்டியிட்ட எடியூரப்பா, கவர்னரின் அழைப்பை ஏற்று அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றவுடன் முதல் உத்தரவாக விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

    ஆனால், அவரது தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், போதிய மெஜாரிட்டி இல்லாமல் மூன்று நாட்கள் மட்டுமே முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பாவின் உத்தரவு பலனற்றுப் போனது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இதை தொடர்ந்து முதல் மந்திரி குமாரசாமி இன்னும் ஒருவாரத்துக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்தாக வேண்டும் இல்லாவிட்டால் கர்நாடத்தில் போராட்டம் வெடிக்கும் என எடியூரப்பா மிரட்டி வருகிறார்.

    கர்நாடக அரசின் சார்பில் பிறப்பிக்க வேண்டிய அனைத்து உத்தரவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையின் தயவை நாடும் நிலையில் மிக குறைந்த அளவிலான சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் குமாரசாமி, விவசாய கடன்களை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன். இல்லாவிட்டால், முதல் மந்திரி பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கர்நாடக மாநில தலைமை செயலகமான விதான் சவுதாவில் நாளை காலை 11 மணியளவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    ×