search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menstruation Issues"

    • பெண் குழந்தைகளுக்கு தாய் தான் அன்போடு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    • இயற்கையாக நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களில் ஒன்றுதான் மாதவிடாய்.

    பருவம் அடையும் காலகட்டத்தை நெருங்கும் உங்களுடைய பதின்மவயது மகளுக்கு ஒரு தாயாக உங்களுடைய ஆதரவும், ஆலோசனைகளும், அரவணைப்பும் அதிகமாக தேவைப்படும். இந்த நேரத்தில் பெண் குழந்தைகள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பல்வேறு மாற்றங்களை சந்திப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு உண்டாகும் பயத்தையும். குழப்பத்தையும் போக்க வேண்டியது ஒரு தாயின் கடமையாகும்.

    மாதவிடாய் நாட்களை எளிதாகவும், இயல்பாகவும் எவ்வாறு கடந்து செல்வது என்பதை பெண் குழந்தைகளுக்கு தாய் தான் அன்போடு கற்றுக்கொடுக்க வேண்டும்.

    பெண் குழந்தைகள் பருவம் அடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்னதாகவே அவர்களுடைய மார்பகங்கள் பெரிதாவது. அக்குள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளர்வது போன்ற மாற்றங்களை தாயால் கவனிக்க முடியும். தன்னுடைய மகள் பருவமடைய போகிறாள் என்னும் நிதர்சனத்தை தாய்மார்கள் பலரும் ஒருவித பதற்றத்துடனேயே எதிர்கொள்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் சானிட்டரி நாப்கின்கள் தொடர்பான விளம்பரங்களை பார்க்கும்போதே, குழந்தைகள் மாதவிடாய் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதை உணர்ந்து, மாதவிடாய் குறித்த சரியான தகவல்களை தாய்மார்கள் தான் மகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

     மனித வாழ்க்கையில் இயற்கையாக நடக்கும் உடல் சார்ந்த மாற்றங்களில் ஒன்றுதான் மாதவிடாய். அதுகுறித்த தயக்கமோ, வெட்கமோ இல்லாமல் உங்கள் மகளிடம் பேசுங்கள். முதலில், மாதவிடாய் குறித்து அவள் என்ன தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதை காதுகொடுத்து கேளுங்கள். மாதவிடாய் குறித்து சில தவறான தகவல்களை உங்கள் மகள் தெரிந்து வைத்திருந்தாலும், அதை அன்போடு திருத்துங்கள்.

    9 முதல் 15 வயதுக்குள் பெண் குழந்தைகள் தங்களுடைய முதல் மாதவிடாய் நாட்களை சந்திக்கிறார்கள். சராசரியாக 12 வயது தொடங்கியதுமே, சானிட்டரி நாப்கின், ஒரு ஜோடி உள்ளாடைகள் ஆகியவற்றை எப்போதும் அவர்களது பள்ளிப் பையில் வைத்திருக்கவும், அதன் அவசியத்தையும் எளிமையாகச் சொல்லி அறிவுறுத்துங்கள்.

    மாதவிடாயைப் பற்றி வட்டார வழக்கில் கூறாமல் அறிவியல் ரீதியாக சொல்லிக் கொடுங்கள். தாயாகிய உங்களுக்கு பெண் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி பேசுவதற்கு தயக்கம் இருந்தால், உங்கள் வயதுடைய உறவுக்கார பெண் அல்லது வயதில் மூத்த பெண்களை பேச வைக்கலாம்.

     மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின், கப், டாம்பான் ஆகியவற்றை முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெளிவாக. வெட்கப்படாமல் உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். மாதவிடாயின்போது அணியும் உள்ளாடைகளை சுத்தமாக பராமரிப்பது. உடலையும் அந்தரங்க உறுப்புகளையும் எவ்வாறு சுத்தம் செய்வது என்று கற்றுக்கொடுங்கள். இதன் மூலம். மாதவிடாய் மீதான குழப்பமும். பயமும் நீங்கி பெண் குழந்தைகளின் மனம் தெளிவு அடையும்.

    மேலும், பிறப்புறுப்பு பகுதியில் சோப்பு போன்ற ரசாயனங்களைக்கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துங்கள்.

    பள்ளியிலோ, வீட்டிலோ, பொது இடத்திலோ அல்லது சமூக- குடும்ப நிகழ்வுகளிலோ இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டாலும், அந்த சூழ்நிலையை எளிமையாக கையாண்டு இயல்புநிலைக்குத் திரும்புவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுங்கள்.

    ×