search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysterious Girl"

    • கடந்த 2011-ம் ஆண்டு மாயமான சிறுமி ஒருவரை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • சிறுமி மாயமான வழக்கை தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை காவல் துறையினர் கடந்த 2011-ம் ஆண்டு மாயமான சிறுமி ஒருவரை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சாலி கிராமம் மஜித் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மகள் கவிதா 2 வயது குழந்தையாக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டு காணாமல் போனார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால் எந்த வித துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியை கண்டுபிடிப்பதற்கு போலீசார் தற்போது ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    சிறுமி மாயமான வழக்கை தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். 2 வயதில் மாயமான சிறுமியின் புகைப்படத்தை வைத்து தற்போது 14 வயதில் வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்பதை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலமாக புகைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

    இந்த 2 புகைப்படத்தையும் ஒன்றாக வைத்து போஸ்டர் அடித்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    கவிதாவை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 9444415815, 9498179171 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் இப்படி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தனது மகளை தேட தொடங்கியுள்ள நிலையில், நிச்சயம் தனது மகள் திரும்ப வருவாள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் தந்தை கணேஷ். இதுபற்றி அவர் கூறும்போது, எங்கு சென்று குறி கேட்டாலும் மகள் திரும்ப கிடைத்து விடுவாள் என்றே சொல்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்து மகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

    ×