search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NatWest Series Final"

    இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 325 ரன்னை சேஸிங் செய்த நாளில் முகமது கைப் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். #Kaif
    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், தலைசிறந்த பீல்டராகவும் திகழ்ந்தவர் முகமது கைப். 19 வயதிற்கு உட்பட்டோருக்காக உலகக்கோப்பையை இவரது தலைமையில்தான் இந்திய அணி முதன்முறையாக கைப்பற்றியது. யுவராஜ் சிங் உடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.

    2000-த்தில் இந்திய தேசிய அணியில் முகமது கைப்பிற்கு இடம் கிடைத்தது. 2006-ம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இதுவரை 13 டெஸ்ட், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு சதத்துடன் 624 ரன்களும், ஒருநாள் போட்டியில் இரண்டு சதங்களுடன் 2753 ரன்களும் அடித்துள்ளார். கைப் என்றாலே நமக்கு ஞாபகம் வருது கங்குலி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிதான்.



    இதில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து திரெஸ்கோதிக் (109), கேப்டன் மைக்கேல் வாகன் (115) ஆகியோரின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது. அந்த நேரத்தில் 275 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சேஸிங் செய்வது இயலாத காரியம். இதனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் டி-சர்ட் காலரை தூக்கிவிட்டு இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கினார்கள்.

    சச்சின் தெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு கைப் களம் இறங்கினார். அப்போது இந்தியா 24 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 256 பந்தில் 180 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யுவராஜ் சிங் உடன் கைப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. யுவராஜ் சிங் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கைப் 75 பந்தில் 87 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறவைத்தார்.



    புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தாதா கங்குலி தனது சட்டையை கழற்றி கையில் வைத்து சுழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்த வெற்றியை மறந்திருக்கமாட்டார்கள். ஆட்ட நாயகன் விருதை பெற்ற   முகமது கைப்பையும் மறந்திருக்க மாட்டார்கள். இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நாளாக கருதப்படும் ஜூலை 13-ந்தேதி (2002-ம் ஆண்டு) அன்று கைப் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    ×