search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northern island"

    ஜப்பானில் பயங்கர நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. கட்டிடங்கள் தரை மட்டமாகின. இந்த விபத்தினால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. #JapanEarthquake #earthquakejapan
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக பெருத்த மழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. அதன் சுவடு மறைவதற்கு முன்பாக நேற்று அதிகாலை அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது.



    நேற்று அதிகாலை 3.08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஹொக்கைடோ தீவில் டோமகோமாய் நகருக்கு கிழக்கே மையம் கொண்டு இருந்தது. இது பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஹொக் கைடோ மாகாணத்தின் தலைநகரான சப்போரா உள்ளிட்ட நகரங்களில் அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். சப்போரா நகரத்தில் மட்டுமே 19 லட்சம் பேர் வசிக்கின்றனர். நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து, பதறியடித்துக்கொண்டு வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.

    அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே நேரத்தில் சுனாமி ஆபத்து எழவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு சேவை பாதிக் கப்பட்டது. ஏறத்தாழ 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. 40 மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லை. தொலைபேசி, தொலைக் காட்சி சேவையும் பாதித்தது.

    டோமரி அணுமின்நிலையத்தில் உள்ள அணு உலைகள் பாதிக்கப்பட்டபோதும், அவசர கால மின்சக்தியைப் பயன்படுத்தி எரிசக்தி ‘ராடு’கள் குளிர்விக்கப்பட்டதாக மந்திரிசபை செயலாளர் யோஷிஹிடே சுகா கூறினார். எனினும் கதிர்வீச்சு அபாயம் குறித்து தகவல் ஏதும் இல்லை. மிட்சுபிஷி உருக்கு ஆலையில் தீப்பிடித்ததாகவும், பின்னர் தீ கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதே போன்று முரோரன் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நேரிட்டது. அங்கும் தீ அணைக்கப்பட்டு விட்டதாக தெரியவந்து உள்ளது.

    விமான சேவைகள், ரெயில் சேவைகள், புல்லட் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டது.

    நிலநடுக்கம், நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் முதல் தகவலில் 2 பேர் பலியான நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாகவும், 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும், பலரை காணவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    பிரதமர் ஷின்ஜோ அபே காலை 6 மணிக்கே தனது அலுவலகத்துக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர், “நிலநடுக்கம், நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அரசு அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட ஏதுவாக கட்டளை மையம் ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. மக்களைக் காப்பாற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது” என தளர்ந்து போன குரலில் கூறினார்.

    ஹொக்கைடோ மாகாண கவர்னரின் வேண்டுகோளின்படி, மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை கவனிக்க டோக்கியோவில் இருந்து 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு விரைகின்றனர். #JapanEarthquake #earthquakejapan 
    ×