search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Building Plan"

    • சென்னையில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
    • கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதியை 100 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி ஆணை வெளியிட்டிருப்பது நியாயமில்லை.

    சென்னையில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும்.

    எனவே தமிழக அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ள கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
    • கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    சென்னை:

    தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சதுர அடிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலைக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசென்சு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்து அடங்கிவிடும்.

    சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88 ம், சிறப்பு நிலை பி மாநகராட்சிகளான தாம்பரம், சேலம், திருச்சியில் சதுர அடிக்கு ரூ.84-ம், தேர்வு நிலை மாநகராட்சிகளான ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79ம், தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரத்திற்கு சதுர அடிக்கு ரூ.74-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27-ம், இதர பகுதிகளில் நகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25-ம், சி.எம்.டி.ஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22-ம், இதர 11 ஆயிரத்து 791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

    • ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்ட அனுமதிக்கான கால அளவு 5 ஆண்டுகளாகவும், அதில் கட்டிட விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டிட வரைபட அனுமதி அளிக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் மட்டுமே செல்லும். இந்த அனுமதி உத்தரவு, விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தாது. அதை ஆவணமாக பயன்படுத்த இயலாது. சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாக, நிறுவனத்துக்கு சொந்தமானதாக, திறந்தவெளிப் பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்கப்பட்டதாக இருந்தால், அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். கட்டிடம் கட்டும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்.

    விண்ணப்பத்தில் காட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி, கழிவுநீர்த்தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப்பொருட்கள், கழிவுகளை கொட்டக்கூடாது. கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ×