search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pan Aadhaar Link"

    • நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.
    • ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

    சென்னை:

    ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பணவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதனை இணைக்க வலியுறுத்தியது.

    சாமான்ய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் புள்ளி விவரங்களை சேகரிக்கும் வகையில் பான்-ஆதார் இணைப்பு கருதப்படுகிறது. கடந்த 2 வருடத்திற்கு மேலாக பொதுமக்களை வலியுறுத்தி வந்த நிலையில் 3 முறை நீட்டிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

    முதலில் ஒரு வருடத்திற்குள் இணைக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ.500 அபராதத்துடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30-ந்தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க இறுதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அவை முடிந்தது.

    நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர். கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பிட்ட அளவில் இணைக்கவில்லை. வங்கி நடைமுறையை பின்பற்றாதவர்கள் தான் அதிகளவில் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிட வேண்டும். இன்னும் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதத்தினர் இணைக்காததால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறும்போது, பானுடன் ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். இது முழுக்க முழுக்க வங்கி பணியை சார்ந்ததாகும். ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும். வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும். இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும்.

    அதனால் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்கவில்லை. இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இதுபற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

    ×