search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pancha Murthys"

    • காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
    • காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.

    ×