search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parangimalai train accident"

    பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Parangimalai #TrainAccident #StThomas
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

    இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #Parangimalai #trainaccident
    சென்னை:

    கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்த 5 பேர் ரெயில் பாதை இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்து உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து முதல் கட்ட தகவல்களை திரட்டினார். விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை லக்னோவில் உள்ள ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனரிடம் அவர் தாக்கல் செய்தார்.

    அதில் கே.ஏ.மனோகரன் கூறியிருப்பதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத் தில் பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சரியில்லை. பயணிகள் பயணம் செய்த விதத்திலும் தவறு இருக்கிறது. இதனால் விபத்து நடந்துள்ளது. ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த பயணிகள், பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்தபோது மற்ற பயணிகளையும் பிடித்து இழுத்துள்ளனர்.

    இந்த ரெயிலில் 1,168 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், சம்பவத்தன்று சுமார் 2 ஆயிரத்து 200 பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்று ரெயில்வே வணிகத்துறை கணக்கிட்டு உள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதற்காக வேகம் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த காரணத்தால், இரண்டு ரெயில் பாதைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த விபத்து காரணமாக ரெயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பெட்டிகளில் மின் சாதனங்கள் சேதமடைந்த வகையில் ரூ.294 மட்டும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    விபத்துகளை தவிர்க்க பரிந்துரைகள்

    வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அவர் தெரிவித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-

    * கூட்ட நேரங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரெயில்களின் இருக்கைகள் கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல் நீளவாக்கில் அமைக்க வேண்டும்.

    * ரெயில் பாதைகளை கடப்பதாலும், ரெயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாலும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    * பிரதான ரெயில் நிலையங் களிலும், நடைபாதைகளிலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக் கவும், பயணிகள் ரெயில் பெட்டிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கவும் ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    * படிகளில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடுமையாக்கப்பட வேண்டும்.

    * புறநகர் ரெயில்களில் தானாக கதவு மூடிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    * விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உண்மையான பயணிகள். அவர்களின் பாதுகாப்பு ரெயில்வேயின் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 25-க்கும் மேற்பட்டவர்களிடம் ரெயில்வே ஊழியர்களிடம் பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தினார். #TrainAccident #chennai #StThomasMount
    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போது ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பக்கவாட்டு சுவரில் மோதி பலியானார்கள்.

    கடந்த 24-ந்தேதி நடந்த இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 கால்களை இழந்த மற்றொரு வாலிபரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் விபத்து குறித்து 30-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவலை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விசாரணை இன்று நடைபெற்றது.

    சென்னை ரெயில்வே அலுவலகம் 5-வது தளத்தில் உள்ள கோட்ட மேலாளர் கருத்தரங்க அறையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் விசாரணை நடந்தது. தலைமை பாதுகாப்பு அதிகாரி மேதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையின் போது இருந்தனர்.

    ரெயில் விபத்தை பார்த்தவர்கள், அந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் என 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தகவல்களை கூற வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தார்கள்.

    இதுதவிர ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரெயில் டிரைவர், கார்டு, நிலைய மேலாளர், பொறியாளர் என 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர்தான் விபத்திற்கு காரணம். அதனை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    நிலையத்திற்கு ரெயில் வந்த வேகத்தின் அளவு என்ன? பக்கவாட்டு சுவருக்கும்-ரெயில் பெட்டிக்கும் உள்ள இடைவெளி என்ன என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே பாதுகாப்பு ஆணையர் தகவல்களை திரட்டியுள்ளனர்.

    இன்று மாலை வரை நடைபெறும் விசாரணையை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? பக்கவாட்டு சுவர் அகற்றப்படுமா என்பது தெரியவரும். #TrainAccident #chennai #StThomasMount

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 2 கால்களையும் இழந்த மாணவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். #StThomasMountStation #TrainAccident
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பயணிகள் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதியதில் 10 பயணிகள் கீழே விழுந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் சிவக்குமார், பிளஸ்-2 மாணவர் பரத், தனியார் நிறுவன ஊழியர் நவீன்குமார், வேல்முருகன் ஆகிய 4 பேர் பலியானார்கள்.

    கல்லூரி மாணவர் விக்னேஷ், நரேஷ், விஜய், யாசர், மூர்த்தி, ஸ்ரீவர்‌ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்களும், காயம் அடைந்தவர்களும் சிதறி கிடந்தனர்.

    இதில் பலியானவர்களில் 2 பேருக்கு தலை துண்டானது. கால்களும் துண்டாகி கிடந்தது.

    காயம் அடைந்த ஸ்ரீவர்ஷனுக்கு இரண்டு கால்கள் விஜய்க்கு வலது காலில் பாதம் துண்டானது. மற்றவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களையும், சிதறி கிடந்த கால்கள் மற்றும் உறுப்புகளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நரேஷ், விக்னேஷ் ஆகியோர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டனர்.


    இரண்டு கால்களையும் இழந்த ஸ்ரீவர்‌ஷன், விஜய், யாசர், மூர்த்தி ஆகியோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்ரீவர்‌ஷனின் துண்டான கால்கள் பற்றி டாக்டர்கள் கேட்டபோது, அவை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    அங்கு பலியானவர்களின் உடலோடு தலை, கால்களை பொருத்தி பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அவரின் கால்களை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டனர். உடனே ஸ்ரீவர்‌ஷன் அணிந்திருந்த பேண்ட்டை அடையாளமாக வைத்து அவரது கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐஸ் பேக்கில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் இரண்டு கால்களும் மிகவும் சிதைந்து இருந்ததால் ஸ்ரீவர்‌ஷனுக்கு பொருத்த முடியவில்லை.

    இதையடுத்து ஸ்ரீவர்‌ஷனுக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்தபோது ரத்தம் அதிகம் வெளியேறியதால் உயிருக்கு போராடி வருகிறார்.

    பிளஸ்-2 முடித்துள்ள மாணவர் ஸ்ரீவர்‌ஷன் தனது நண்பர் விஜய்யுடன் கிண்டியில் உள்ள பள்ளிக்கு சென்ற போது ரெயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்தது தெரிய வந்தது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    ×