search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur molestation case"

    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் போலி ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு காவல் நீட்டித்தும் பெண் உதவியாளருக்கு ஜாமீனில் விடுதலையும் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம்பெண்களை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

    ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் யாரையும் விசாரிக்காமல், கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தொடர்பாக செல்போனில் பேசியதாக வெளியிட்ட போலி ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம், கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு, வக்கீல் அருளுக்கு 3-ந் தேதி நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் வக்கீல் அருள் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக 2-வது வழக்காக அருள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அந்த வழக்கிற்காக சிறையில் இருந்த வக்கீல் அருளை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் போலீசார் நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    பின்னர் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வக்கீல் அருளை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 2-வது வழக்கிற்கு ஜாமீன் கேட்டு, வக்கீல் அருள் தரப்பினர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே போலியான ஆடியோ வெளியிட உடந்தையாக இருந்ததாக கைதான கலையரசி தரப்பினர், அவருக்கு ஜாமீன் கேட்டு பெரம்பலூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவினை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் கலையரசிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து கலையரசி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வக்கீல் அருளை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை முக்கிய பிரமுகர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டுவதாக வக்கீல் அருள் புகார் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வக்கீல் அருள் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், என்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் என்னிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார். மேலும் கட்சிக்கு அவப்பெயரையும், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்தியினை அவர் வெளியிட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, அந்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 4-ந்தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த உள்ளன. இதனால் பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூர் பாலியல் சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
    ×