search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RajivGandhi Govt Hospital"

    • குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல்.
    • பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் என்ன கருத்தினைத் தெரிவித்தாரோ அதற்கேற்ப, 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறில்லை' என்று விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அமைச்சரின் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதிலிருந்து விசாரணை அறிக்கை என்பது ஒரு தலைபட்சமானது என்பது தெளிவாகிறது.

    மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தன் ஒன்றரை வயது மகனின் கை அகற்றப்பட்டு, மனம் நொந்து போயுள்ள நிலையில், குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல். இதுவும் கடும் கண்டத்திற்குரியது.

    சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இதுபோன்ற நிலை இருந்தால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் தவறுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×