search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "registration documents"

    பத்திரப்பதிவு துறையில் ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் இ-மெயில் மூலம் பத்திர நகல்கள், பதிவு கட்டணம் செலுத்தும் முறையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    பத்திர பதிவுத்துறையில் அலுவலகத்திற்குச் சென்று வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் பெறும் வசதி உள்ளது.

    தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான “ஸ்டார் 2.0” திட்டத்தின் கீழ், பதிவுத் துறையில் வீட்டிலிருந்த படியே இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை இணைய தளம் வழியாகவே செலுத்தி விரைவுக் குறியீடு வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகலை தரவிறக்கம் செய்து கொள்ளும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    சான்றிதழில் அச்சிடப்பட்டிருக்கும் விரைவுக் குறியீட்டை ஒளிவருடல் செய்தால் சான்றிதழின் நகலினை மையக் கணினியிலிருந்து பார்வையிடலாம். இம்முறையில் சான்றிதழின் உண்மைத் தன்மையை எவரும் அறிந்து கொள்ளலாம். இந்த சான்றிதழ்கள், பதிவு விதிகள் படி வழங்கப்படுவதால் உரிய சட்ட அங்கீகாரமும் பெற்றுள்ளது.

    இந்த புதிய வசதியால், பொதுமக்கள் வில்லங்கச் சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்படும்.

    தற்போது நடைமுறையில் உள்ள பதிவுத்துறைக்கான கட்டணங்களை 11 வங்கிகளின் இணையவழி மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக, இந்திய நிதியமைப்புக்குட்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனை முறைகளிலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட புதிய இணையவழி கட்டணம் செலுத்தும் முறையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இப்புதிய முறையினால் 58 வங்கிகளின் வழியே இணைய வங்கி சேவை நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, ஒருங்கிணைந்த கட்டண முகப்பு ஆகிய அனைத்து வழிகளிலும் பதிவுத்துறைக்கான கட்டணத்தை பொது மக்கள் செலுத்தலாம்.

    பதிவுப் பணிகள் நிறைவடைந்து ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒளிவருடல் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணத்தை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் புதிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இப்புதிய வசதியினால் பொதுமக்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற்றுச் செல்ல தாமதமாகும் தருணங்களில் ஒளிவருடல் செய்யப்பட்டு தங்கள் மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட ஆவண பிம்பங்களை தங்களின் உடனடி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், சீட்டுப் பதிவு மற்றும் சங்கப் பதிவுக்கான மென்பொருள் மேம்படுத்தப்பட்டு ஸ்டார் 2.0 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மை நிறுவனப் பதிவுக்கு புதிதாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து நகல்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற சீட்டுக்கள், சங்கங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன், இந்து திருமணப் பதிவு சட்டம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், தனி திருமணப் பதிவுச் சட்டம், கிறிஸ்துவ திருமணப் பதிவுச் சட்டம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குவதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு, ஸ்டார் 2.0 மென் பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், இணைய தளம் மூலம் விண்ணப்பித்து இலக்கச் சான்றொப்பமிட்ட அனைத்து சான்றிதழ்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற திருமணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பனந்தாளில் 57 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், படப்பை மற்றும் உறையூரில் தலா 80 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 5 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பாலங்களை திறந்து வைத்தார்.


    தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகளை தொய்வின்றி செயல்படுத்திடவும், தொழில் முனைவோருக்கு வழங்கும் சேவையினை மேம்படுத்திடவும், இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, 12 உதவிப் பொறியாளர்கள் (கட்டுமானம் மற்றும் மின்) பணியிடங்களுக்கு பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 உதவிப் பொறியாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 6 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்குகள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேளுக்குறிச்சி கிளை அலுவலகக் கட்டடம் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் சீர்காழி கிளை அலுவலகக் கட்டடம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உரக் கிடங்குகள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  #TNCM #EdappadiPalaniswami
    ×