search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reservation centers"

    தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 4,542 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,367 பேருந்துகளும் பிற மாவட்டங்களில் இருந்து 9200 பேருந்துகளும் என மொத்தம் 20,567பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நவம்பர் 7 முதல் 10-ந் தேதிவரை சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக செல்லக் கூடிய பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

    சுமார் 1000 பேருந்துகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. இதே போல தாம்பரம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்களும், பூந்தமல்லியில் ஒரு கவுண்டரும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் ஒரு கவுண்டரும் என மொத்தம் 30 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது.

    சென்னையில் இருந்து செல்வதற்கு மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து திரும்பவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கினாலும் 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் திட்டம் உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 62,219 பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 39,490 பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இன்று முதல் இந்த எண்ணிக்கை உயரும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை அதிகரிப்போம். 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பேருந்துகளுக்கு மட்டும்தான் முன்பதிவு செய்யப்படும். அதற்கு குறைவான தூரங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு பயணிகளுக்கு டோக்கன் வழங்கி நெரிசல் இன்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளியூர் செல்லக் கூடிய பயணிகள் 6 பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த 6 பேருந்து நிலையங்களுக்கும் கோயம்பேட்டில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.



    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மட்டுமே புறப்பட்டு செல்லும். தாம்பரம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. தாம்பரம், ரெயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.

    பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துர், ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்லும்.

    மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Diwali #SpecialBuses

    ×