search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retired sub inspector killed"

    ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல்ஜபார் (வயது 64). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவருக்கு சபீரா, ரபாயா‌ஷபி என்ற 2 மனைவிகளும், ஜலால், ஜாபர், ஜாகீர் என்ற 3 மகன்களும், ஜைத்துன்பீ என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    அப்துல்ஜபார் குடும்பத்துடன் திருக்கோவிலூர் இந்திரா நகரில் தற்போது வசித்து வந்தார். எடப்பாளையத்தில் அப்துல் ஜபாருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. வேலையில் இருந்து ஓய்வுபெற்றதும் அவர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தை கவனிப்பதற்காக அங்கு ஒரு வீடும் கட்டி இருந்தார்.

    அவர் தினமும் விவசாய நிலத்தை சென்று பார்வையிட்டு வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து விவசாய நிலத்துக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதைத்தொடர்ந்து அப்துல்ஜபாரின் உறவினர் ஒருவர் எடப்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள வீட்டில் அப்துல் ஜபார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரது தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதைப்பார்த்ததும் உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து அப்துல்ஜபார் குடும்பத்தினருக்கும், திருவெண்ணைநல்லூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அப்துல்ஜபாரின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    அப்துல்பஜாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்துல்ஜபார் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், விவசாய பணியில் ஈடுபட்டார். அவரது உறவினர்களுக்கிடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதில் அப்துல் ஜபார் தலையிட்டு சமரசமாக பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார்.

    சொத்துக்கிடைக்காத ஆத்திரத்தில் மர்ம மனிதர்கள் அவரை கொலை செய்தார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×