search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Satya Prasad Sahu"

    தமிழகத்தில் அதிக பணம் புழங்கும் தொகுதிகள் பற்றி தேர்தல் கமிஷனுக்கு தெரியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார். #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழகத்தில் அதிக பணம் புழங்கும் தொகுதிகள் பற்றி தேர்தல் கமிஷனுக்கு தெரியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.

    இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு 150 கம்பெனி துணை ராணுவம் அடுத்த வாரம் வர உள்ளது. இதற்கான ஒப்புதலை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது. ஒவ்வொரு கம்பெனியிலும் 90 வீரர்கள் இருப்பார்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட (140 கம்பெனிகள்) இந்த முறை அதிக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலுக்கு 200 கம்பெனி துணை ராணுவத்தை கேட்டிருந்தோம். தற்போது 160 கம்பெனி துணை ராணுவத்தினரை அனுப்ப தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துவிட்டனர்.

    எந்தெந்த தொகுதிகளுக்கு துணை ராணுவ வீரர்களை அனுப்புவது என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளிடம் ஆலோசித்துள்ளோம். துணை ராணுவ வீரர்கள் தமிழகத்துக்கு வந்ததும் எல்லா தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள்.

    தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் கடந்த மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள். தமிழகத்தில் பண பலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து வேட்பாளர்களும் சரிசமமான முறையில் போட்டியிட வழிவகை செய்யவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அவர்கள் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு காணொலி காட்சி மூலமாக ஆலோசனை வழங்கப்பட்டது. அதிக அளவிலான பணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் தேர்தலின்போது பண பலத்தை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 4-ந் தேதி காலை 9 மணி வரையில் பல்வேறு இடங்களில் இருந்து ரூ.45.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    யார்-யாரிடம், எந்தெந்த இடங்களில் இருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்து உள்ளது என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

    தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு குழு, பறக்கும் படை மூலமாக ரூ.94.10 கோடி பறிமுதல் செய்து உள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட பணத்துடன், 520.65 கிலோ தங்கமும், 421 கிலோ வெள்ளியும் பறிமுதல் ஆகியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.139.73 கோடியாகும்.

    தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 19 ஆயிரத்து 655 துப்பாக்கிகள் உரியவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கடத்திக்கொண்டு செல்லப்பட்ட ரூ.25.78 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரத்து 198 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு வாக்களிக்க வசதியாக, தபால் ஓட்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த வாரத்தில் இரண்டாவது பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அப்போது அவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும். அங்கேயே அந்த வாக்குகளை செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படும்.

    தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். வறட்சி, குடிநீர் வினியோகம் போன்ற முக்கிய பணிகள் பற்றி அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தலாம். இதுபோன்ற பணிகளுக்கு சிறப்பு அனுமதியை தேர்தல் கமிஷன் வழங்கும்.

    தமிழகத்தில் பல தொகுதிகள் அதிக அளவில் பணம் புழங்கும் தொகுதிகளாக உள்ளன. இதுபற்றி தேர்தல் கமிஷனும் அறிந்துள்ளது. எனவேதான் இங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.#SatyabrataSahoo
    ×