search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sayana narasimhar"

    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மர் சயன கோலத்தில் (படுத்திருக்கும் நிலையில்) தாயாருடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக மற்ற கோவில்களில் நரசிம்மர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மர் சயன கோலத்தில் (படுத்திருக்கும் நிலையில்) தாயாருடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    திருமாலின் திருத்தலங்களில் இந்த கோவிலில்தான் நரசிம்மர் சயன கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாருடன் எழுந்தருளி இருப்பதால் இது போக சயனம் ஆகும்.

    இந்த சயன நரசிம்மர் திருவக்கரையில் வக்ரா சூரனை அழித்து விட்டு அதன் பரிகாரத்துக்காக இந்த தலத்தில் வந்து சயனித்துள்ளார். 700 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் திருவந்திபுரம் செல்லும்போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    மற்ற கோவில்களில் கை கூப்பி நிற்கும் கருடாழ் வார் இந்த கோவிலில் கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு பெருமாள் திரிபுர சம்ஹாரத்தின் போது சங்கு, சக்கரங்களை வழங்கியதாக புராணம் கூறுகிறது.

    1,300 வருடங்களுக்கு முன்பு ஓம் என்ற வடி வில் திருவதிகை இருந்துள்ளது.உப்பிலியப்பன் சீனிவா சனை போல இங்குள்ள சரநாராயண பெருமாள், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமானின் போருக்கு பெருமாள் சரம் (அம்பு) கொடுத்து உதவிய தால் சரநாராயண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

    இங்குள்ள மூலவர் சரநாராயண பெருமாள் முழுவதும் சாளக்கிரமத்தால் (கருங்கல்) ஆனவர். சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உற்சவம், ஆடி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊஞ்சல் சேவை, ஆவணி ஜெயந்தி உற்சவம், புரட்டாசி பெருமாள் புறப்பாடு, ஐப்பசி தீபாவளி உற்சவம், கார்த்திகை திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி தனுர் மாத பூஜை, தை உள் புறப்பாடு, மாசி ஒரு நாள் மண்டகப்படி, பங்குனி உத்திர திருமஞ்சனம் என மாதந்தோறும் ஒரு விழா நடக்கிறது. இது ஒரு பிரார்த்தனை தலம் ஆகும்.

    அமாவாசைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கோவில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக திருவந்திபுரம் செல்லும் சாலையில் திருவதிகை என்ற ஊரில் அமைந்துள்ளது.

    நேர்கோட்டில் அமைந்துள்ள சிங்கிரிகுடி, பூவரசன் குப்பம், பரிக்கல் தலங்களை தரிசனம் செய்ய செல்பவர்கள் இந்த தலத்துக்கும் சென்று சயன நாராயண பெருமாளின் அருளைப் பெறலாம்.
    ×