search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shobha Karandlaje"

    • தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள்.
    • கேரளாவில் இருந்து வந்து கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் மீது திராவகம் வீசுகிறார்கள்.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதி குண்டு வெடித்தது. என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய இணை மந்திரி சோபா கருத்து கூறும்போது, "தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார். பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தனது கருத்து கடும் கண்டனம் வலுக்கவே, மந்திரி இணை மந்திரி ஷோபா தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என்னுடைய தமிழ் சகோதரர்கள், சகோதரிகளுக்கு, யாரையும் புண்படுத்தும் வகையில் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை.

    இருந்தபோதிலும், என்னுடைய கருத்துகள் வலியை ஏற்படுத்தியதாக பார்க்கிறேன். இதனால் நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய கருத்துகள் ராமேஸ்வரம் கஃபே உணவகம் குண்டு வெடிப்பு தொடர்பாக, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டவர்களை பற்றி குறிப்பிடும் வகையில் அமைந்தது மட்டுமே.

    தமிழ்நாட்டில் உள்ள யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், என்னுடைய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் விஷயத்தில் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்திற்கு பிறகு ஷோபா நிருபர்களிடம் கூறும்போது, "பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் மீது திராவகம் வீசுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது அனுமன் பஜனை பாடலை ஒலி பரப்பிய கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளனர். இந்த அரசு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. ஓட்டு அரசியலை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி உள்ள மத்திய பா.ஜனதா இணை மந்திரி ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்.ஐ.ஏ. அதிகாரியாக இருக்க வேண்டும், அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பா.ஜனதாவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.

     நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா கரந்த்லாஜே மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பா.ஜனதாவில் இருக்கும் அனைவரும் இத்தகைய அசிங்கமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும்.தேர்தல் ஆணையம் ஷோபா கரந்த்லாஜேவின் வெறுப்புப் பேச்சை கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் பா. ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஷோபாவின் வெறுப்பு பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.

     இது போன்ற பிரிவினைவாத பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ShobhaKarandlaje
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில பா.ஜனதா பெண் எம்.பி. ஷோபா காரன்ட்லஜி. இவர் தனது சம்பள பணம் வரும் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ரூ.15 லட்சத்து 62 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் முதல் பல பரிவர்த்தனை மூலம் பணம் திரட்டப்பட்டு இருந்தது. ஆனால் வங்கி கணக்கில் பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ். தகவல் எதுவும் வரவில்லை. மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஷோபா காரன்ட்லஜி கூறும்போது, “எனது வங்கி கணக்கில் இருந்து நான் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ். தகவல் வரும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்படும்போது கூட எனக்கு எந்த எஸ்.எம்.எஸ். தகவலும் வரவில்லை” என்றார்.

    இந்த மோசடி குறித்து வடக்கு அவென்யூ போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஷோபா காரன்ட்லஜி எம்.பி. வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட வழக்கு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த பண பரிவர்த்தனை உள்நாட்டில் நடந்ததா? அல்லது வெளிநாட்டில் நடந்ததா? என்ற விவரத்தை வங்கியிடம் இருந்து கேட்டு இருக்கிறோம்” என்றார்.

    கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் செயலாளர் அசோக் மாலிக்கின் கிரடிட் கார்டு மூலம் மர்ம நபர்கள் ரூ.1.38 லட்சத்தை திருடினர் என்பது குறிப்பிடத்தக்கது. #ShobhaKarandlaje
    ×